
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னிற்கு ரூ.195 கூடுதலாக வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கப்பட்டுள்ளது என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரும்பு சாகுபடிப் பரப்பினையும் உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசு, நலிவடைந்து வரும் சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, எத்தனால் உற்பத்தித் திட்டம், இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சர்க்கரை ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப்பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022-23 அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு 2022-23 ம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள விலையான ரூ.2821.25 யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணையிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் 2 பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.3016.25 கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 லட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... சொந்தக் காரை விற்று ஆதரவற்றோருக்கு தீபாவளி பரிசு தந்த தமிழ் யூடியூபர்!
கனமழை : மிதக்கும் சென்னை... வெள்ளக்காடான சாலைகள்... ‘டெங்கு’ பயத்தில் அலறும் பொதுமக்கள்!
மேடையில் உற்சாக நடனமாடிய முதல்வர்... ஆரவாரத்தில் அதிர்ந்த அரங்கம்!
அதிர்ச்சி... ஐஐடி வளாகத்தில் மாணவியைத் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை!