`அதிகமாக நெல் ரகங்கள் வேண்டும்; கடன் உடனே வழங்கவும்'- அமைச்சரிடம் ஏராளமான கோரிக்கை வைத்த விவசாயிகள்

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்
கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள்

``விவசாயிகள் சென்ற ஆண்டைப் போல இந்த ஆண்டும் உரிய காலத்தில் சாகுபடி செய்து நெல் உற்பத்தியில் சாதனை படைக்க வேண்டும்'' என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், எம்.பிக்கள் எஸ். எஸ்.பழனிமாணிக்கம், ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி விஜயன் மற்றும் டெல்டா மாவட்ட எம்எல்ஏக்கள், மேயர்கள், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ``கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்னதாக விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதேபோல் தற்போதும் முதல்வரின் உத்தரவால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிவதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரம், பயிர் கடன் உள்ளிட்டவைகளை எந்தவித தங்கு தடையும் இன்றி தேவையான அளவு வழங்க அரசு நிர்வாகம் தயாராக உள்ளது. எனவே விவசாயிகள் உரிய நேரத்தில் சாகுபடி பணியை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் குறுவை தொகுப்பு திட்டம் ரூ.61 கோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விரைவில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் வழங்கப்பட உள்ளது. எனவே கடந்த ஆண்டு நெல் மகசூலில் சாதனை படைத்தது போல் இவ்வாண்டும் நெல் மகசூலில் விவசாயிகள் சாதனை படைக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் மற்றும் அமைச்சர்கள்
விவசாயிகள் மற்றும் அமைச்சர்கள்

இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், ``விதை, உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யாமல் அரசு டெப்போக்களில் விற்பனை செய்ய வேண்டும். அதிக மகசூல் தரக்கூடிய ஆடுதுறை 37, ஏஎஸ்டி 16 ஆகிய நெல் ரகங்கள் அதிகளவில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உரிய காலத்தில் பயிர் கடன் வழங்கி சாகுபடி பணியை தொடங்க கூட்டுறவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் கடன் பெற ஏதுவாக வருவாய் துறையினரால் வழங்கப்படும் அடங்கல் சான்றிதழ்களை உரிய காலத்தில் வழங்கி விவசாயிகளுக்கு வருவாய் துறையினர் உதவி புரிந்திட வேண்டும். பிற மாநிலங்களைப் போல் பயிர் காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இடுபொருட்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதால் உற்பத்திப் பொருளுக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் தூர்வாரும் பணியை மார்ச் மாதத்திலேயே தொடங்கிட வேண்டும். குறுவை தொகுப்பு திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்து வழங்க வேண்டும்'' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

படங்கள்: ஆர்.வெங்கடேஷ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in