பழமையும் பாரம்பர்யமும் மிக்கது பொதுப்பணித்துறை

கோவையில் அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு
ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலுsource

தமிழக அரசுத்துறைகளில் எத்தனையோ துறைகள் உள்ளன. புதிய அரசுகள் பதவியேற்கும் போதெல்லாம் புதிது, புதிதாகவும் ஏதாவது ஒரு துறை உருவாக்கப்பட்டும் வருகிறது. இதற்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது பொதுப்பணித்துறை. காமராஜர் ஆட்சிகாலத்தில் முதன்மை பெற்றதும் இத்துறைதான்.

இதன் மூலம்தான் அந்தக்காலகட்டத்தில் ஏராளமான அணைத்திட்டங்கள், நீராதாரங்கள் உருவாக்கப்பட்டன. அப்போது பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது இந்தத்துறைதான். அப்போது உருவாக்கப்பட்ட அணைத்திட்டங்கள்தான் இன்றைக்கும் தமிழகத்தை செழிப்பில் வைத்துள்ளன.

இந்த துறை அமைச்சராக முன்னாள் முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றபோது இதில் ஏராளமான சீர்திருத்தங்களை உருவாக்கி, ஆக்கபூர்வமான பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அதன் பிறகுதான் தமிழ்கூறும் நல்லுலகம் இத்துறையை நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தார்கள்.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்கள்
கூட்டத்தில் கலந்து கொண்ட ஆட்சியர்கள்source

மாவட்ட ஆட்சியர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரையிலான அனைத்து துறை அலுவலர்களும் பணியாற்றும் அலுவலகங்களை கட்டிக்கொடுக்கும் முக்கிய துறையாக பொதுப்பணித்துறை செயல்பட்டு வருகிறது. அப்படியான துறையின் தற்போதைய அமைச்சராக இருந்து வருகிறார் எ.வ.வேலு. கோவை வந்த அவர், தன் வகிக்கும் துறையின் பழமை, பாரம்பர்யம், அருமை, பெருமைகள் எல்லாம் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினார்.

அப்படிப்பட்ட முதன்மை மிக்க இத்துறையின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கேற்ப அவரின் கனவுத்திட்டங்களை நிறைவேற்றும் பொதுப்பணித்துறை மற்றும், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் அமைச்சர்.கடந்த 10-ம்தேதியன்று கோவை எஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடந்த அரசு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலு இதைத் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறியது:

100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் உறுதி தன்மையுடன் உள்ளதை காண்கிறோம். அதுபோல் உறுதியான கட்டிடங்களை கட்ட வேண்டும் அவ்வாறு தரமான கட்டடங்களை கட்டுவதற்கு தண்ணீர், மண், சிமெண்ட், ஜல்லி, இரும்பு கம்பிகள் ஆகியவற்றை உரிய பரிசோதனை செய்யவேண்டும். மணலுக்கு பதிலாக எம் சாண்ட் பயன்படுத்தும் போது அவற்றையும் பரிசோதனை செய்யவேண்டும். கான்கீரிட் க்யூப்களை 7 நாட்களுக்கு ஒருமுறையும், 28 நாட்களுக்கு அதன் உறுதிதன்மையை பரிசோதிக்கவேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வருங்காலத்தில் இந்த பகுதிகளில் என்ன தேவை என்பது குறித்து கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். திருப்பூரில் சுரங்கப்பாதை வேண்டும், காங்கேயம் மாடுகளை அடையாளப்படுத்தும் வகையில், காங்கேயம் காளைமாடு உருவம் பொதுப்பணித்துறை அல்லது நெடுஞ்சாலை துறையில் இடத்தில் பொறிக்கவேண்டும், நீலகிரியில் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகள் செல்லும் இரயில் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதால் இரயில்வே மேம்பாலம் கட்டவேண்டும், நிலச்சரிவு அடிக்கடி நிகழ்வதால், அதனை சரிசெய்யும் விதத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளனர். அதற்கு தொழில் நுட்ப வல்லூநர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக முதல்வரின் கனவு திட்டத்தின்படி, அமைச்சர்களின் ஒப்புதல் பெற்று அதற்கான அதிகாரிகள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் என்னென்ன பணிகள் வேண்டும் என பட்டியலிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முதல்வரின் கனவு திட்டம் என்பது, மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதுதான் அதன்படி இப்பகுதிகளில் என்னென்ன மக்கள் பிரச்சனைகள் உள்ளன என கண்டறிய வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது!’ என்று குறிப்பிட்டார்.

கூட்டத்தில் அமைச்சர்கள்
கூட்டத்தில் அமைச்சர்கள்source

எ.வ.வேலுவுடன் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள், அலுவலர்களுக்கான இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை, அரசு கூடுதல் தலைமை செயலாளர், மரு.சந்தீப் சக்சேனா மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் (கோவை), ஜெ.இன்னசென்ட் திவ்யா (நீலகிரி), டாக்டர் எஸ்.வினீத் (திருப்பூர்), திரு.ஹெச்.கிருணனுண்ணி (ஈரோடு), த.பிரபுசங்கர் (கரூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), இ.திருமகன் ஈவெரா (ஈரோடு கிழக்கு), ஆர்.இளங்கோ(அரவக் குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்),ஆர்.மாணிக்கம்;(குளித்தலை), மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in