நெல், பருத்தி கொள்முதல்: உண்மைநிலையை விளக்க வேண்டுகோள்

நெல், பருத்தி கொள்முதல்:   உண்மைநிலையை விளக்க வேண்டுகோள்
தஞ்சையில் பி.ஆர். பாண்டியன்

அரசால் நெல் மற்றும் பருத்தி கொள்முதல் செய்வது கைவிடப்படும் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்த உண்மை நிலையை தமிழக அர”சு உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று(டிச.19) தஞ்சாவூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

”மத்திய அரசு நெல் கொள்முதலை கைவிடப் போவதாக விவசாயிகள் மத்தியில் மிகப் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தடையின்றி நெல்கொள்முதல் தொடரும் என அறிவித்த நிலையில், மத்திய வேளாண்துறை செயலாளர் 'கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம்; அப்படி மீறி கொள்முதல் செய்தால், அதனை தமிழக அரசு ஏற்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. உண்மை நிலையை தமிழக அரசு விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

தற்போது முன் பட்ட சம்பா அறுவடை பணிகள் துவங்க உள்ளது. தமிழக அரசு தடை இன்றி கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை தொடங்கிட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தி குறுவை கொள்முதலில் ஏற்பட்ட பாதிப்பு போல் சம்பாவில் தொடராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை உடன் மேற்கொள்ள முன்வர வேண்டும்

பருத்தி கொள்முதல் தமிழக அரசாங்கம் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்து வருகிறது. தற்போது அதனை கைவிடுவதாகவும், பருத்திக்கு விலை நிர்ணயம் செய்வதை அந்த பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாகவும் செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் விவசாயிகளுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். பருத்தி பணப்பயிர் மட்டுமல்ல, குறைந்த நீரில் நிறைந்த வருவாய் தரக்கூடிய கோடை கால பயிராகும். எனவே இதனை கொள்முதல் செய்வதிலும், விலை நிர்ணயம் செய்யும் பட்டியலில் கைவிடுவதாகவும் வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இவை எந்த வகையிலும் நன்மை தருவதாக அமையாது.

கடந்த ஆண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொள்முதல் செய்யும் வரையிலும் வெளி சந்தையில் ஒரு குவிண்டால் பருத்தி 4,000 ரூபாய்க்கு விற்று வந்தனர். விவசாயிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு கொள்முதலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் துவங்கியபோது, ஒரு குவிண்டால் ரூ7500 வரை விற்கப்பட்டது. இதனை உணர்ந்து, இந்த ஆண்டுக்கான விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதை தொடர வேண்டும்” என்று தமிழக அரசையும் பி.ஆர்.பாண்டியன் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.