அசத்தும் ‘அக்ரி டாக்டர்’!

வீடுகளிலும் இயற்கை விவசாயத்தை விதைக்கும் ராஜ்குமார்
அக்ரி ராஜ்குமார்
அக்ரி ராஜ்குமார்

ரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்தும் தெளித்து விளைவிக்கப்படும் பொருட்கள் ஒருவகையில் நஞ்சுதான். மருந்தென செயல்பட வேண்டிய விவசாய விளைபொருட்களே, நம் உடலுக்கு ஊறுவிளைவிக்கும் சூழலை நோக்கி நகர்ந்துவருகிறோம். இப்படியான சூழலில், குமரி மாவட்ட மக்களுக்கு இயற்கை விவசாயத்தின் பெருமைகளைப் பறைசாற்றுவதோடு, ஆயிரக்கணக்கான இல்லங்களில் வீட்டுத்தோட்டம் அமைக்கவும் வழிகாட்டியிருக்கிறார் அக்ரி ராஜ்குமார்.

மனைவி சாந்தியுடன் அக்ரி ராஜ்குமார்
மனைவி சாந்தியுடன் அக்ரி ராஜ்குமார்

தோட்டக்கலைத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அக்ரி ராஜ்குமார், ஓய்வுக்குப்பின் தன் முழுநேரத்தையும் இயற்கையுடன் கழித்துவருகிறார். இயற்கை விவசாயப் பரப்புரை, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு, விவசாயிகளுக்குப் பண்ணைச் சுற்றுலா என எப்போதுமே சுற்றுச்சூழல் தளத்திலேயே இயங்கிவருகிறார். இதுபற்றி பேசுவதற்காக ராஜ்குமாரை மார்த்தாண்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

நான் சென்றிருந்த நேரத்தில் தன் மனைவி சாந்தியோடு சேர்ந்து வீட்டுத்தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் ராஜ்குமார். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும், உற்சாகம் பொங்கப் பேசத் தொடங்கினார். “அரசாங்கத்தில் வேலைபார்த்து ஓய்வு பெற்றுவிட்டாலும் அது பணி ரீதியான ஓய்வுதான். எப்போதும் விவசாயிகளுடனான என் நேசம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது” எனச் சொல்லிக் கொண்டே அமரச் சொல்கிறார்.

நான் அமர்ந்திருந்த அந்த அறை முழுவதும் ஜில்லென்று இருப்பதை உணர முடிகிறது. மாடியில் தோட்டம் போட்டிருப்பதால் கீழ் அறையில் அந்தக் குளிர்ச்சி நிலவுவதாகச் சொல்லிவிட்டு, தன்னைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார் ராஜ்குமார்.

வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காலிபிளவர்
வீட்டுத்தோட்டத்தில் விளைந்த காலிபிளவர்

’’என் தாத்தா செல்லையா பெரிய நிலச்சுவான்தார். ஏர் பூட்டி உழவு செய்வார். சின்ன வயதில் அவரை ரொம்பவும் பிரமிப்பாகப் பார்த்திருக்கிறேன். என்னோட அப்பா யேசுதாஸ் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர். சமீபத்தில்தான் 93-வது வயதில் இறந்துபோனார். தலைமையாசிரியராக இருந்தாலும் தினமும் சைக்கிளில்தான் பள்ளிக்குச் செல்வார். சொந்த வயல், தோட்டத்தில் வேலைசெய்துவிட்டுத்தான் பணிக்குக் கிளம்புவார். அவரைப் பார்த்தே வளர்ந்ததால் எனக்கும் சின்ன வயதிலிருந்தே விவசாயத்தின் மீது பெரிய ஈர்ப்பு உண்டானது.

பி.எஸ்சி தாவரவியல் படித்தேன். தொடர்ந்து அலகாபாத்தில் எம்.எஸ்சி விவசாயம் படித்தேன். படிக்கும்போது நான்தான் பல்கலைக்கழகத்தில் முதல் மதிப்பெண் எடுத்தேன். இயல்பாகவே எனக்குள் இருந்த விவசாய ஆர்வம்தான் அதற்குக் காரணம். படிப்பு முடிந்ததுமே எனக்கு அரசு வேலை கிடைத்துவிட்டது. ஆனால், அந்தப் பணியில் வெளியூரில் இருந்தாலும், சொந்த மண்ணில் விவசாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருந்ததால் அப்போதே ‘க்ரீன் அக்ரி கிளப்’ எனும் அமைப்பையும் தொடங்கிவிட்டேன்” என்றார் ராஜ்குமார்.

பசுமைப் புரட்சிக்குப் பின்பு மகசூல் அதிகரிக்க அரசு, ரசாயன விவசாயத்தை நோக்கி நகர்ந்திருந்த காலம் அது. மக்கள்தொகைப் பெருக்கமோ பெருக்கல் விருத்தி விகிதத்தில் சென்றுகொண்டிருக்க, உணவுப்பொருள்களின் உற்பத்தியோ கூட்டல் விருத்தி விகிதத்தில் சென்றதால் ஏற்பட்ட மாற்றம் அது.

அரசு அதிகாரியாக ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பரிந்துரைக்கும் சூழலுக்குள் அகப்பட்டுக்கொண்டார் ராஜ்குமார். ஆனால், தனது அமைப்பின் மூலம் இயற்கையான முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, களைகளைக் களைவது, மகசூலைப் பெருக்குவது என விவசாயிகளுக்கு இலவச வழிகாட்டல்களைத் தொடர்ந்தார். அந்தப் பணி இப்போது அரசுப் பணி ஓய்வுக்குப் பின்பும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அதைப் பற்றிப் பேசத் தொடங்கினார் ராஜ்குமார். “இப்போது குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ‘க்ரீன் அக்ரி கிளப்’ இயங்கிவருகிறது. அமைப்பின் சார்பில் மாவட்டத்தைப் பல மண்டலங்களாகப் பிரித்துள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வொரு மாதம் கூட்டம் நடத்துகிறோம்.

இந்த அமைப்பின் மூலமாக நம் வீட்டுக்குத் தேவையான சத்தான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் நோக்கம். வெளியில் இருந்து காய்கனிகளை வாங்கும்போது அதில் ரசாயனத்தைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கனிகளும் வீட்டுக்குள் வந்துவிடும். அதற்கு மாற்றாகத்தான் வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க வலியுறுத்துகிறோம். அதற்கு இலவசமாக வழிகாட்டவும் செய்கிறோம்.

இதுபோக, மாதம்தோறும் நடக்கும் கூட்டத்தின்போது, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கனிகளை ஏலமுறையில் விற்பனை செய்கிறோம். விவசாயிகளுக்கு மகிழ்ச்சியும், அதேநேரத்தில் பயிற்சியும் கிடைக்க வேண்டும் என்பதால் விவசாயப் பண்ணை சுற்றுலாக்களை ஒருங்கிணைக்கிறோம். இதில் நேரடியாகவே பெரிய பண்ணைகளுக்கு அழைத்துப் போய் அவர்களின் வேளாண் வெற்றிக்கதைகளைப் போதித்து விவசாயத்தின் மீதான பிடிப்பை ஆழப்படுத்துகிறேன். பெளர்ணமி நாளன்று முழு நிலவுத் திருநாள், அவ்வப்போது உணவுத்திருவிழா என விவசாயிகளை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கிறோம்” என்றார் ராஜ்குமார்.

‘வீட்டுத்தோட்டம்’, ‘மாடித்தோட்டம்’, ‘நஞ்சில்லா வேளாண்மை’, ‘அக்ரி பிசினஸ்’, ‘தோட்டக்கலை மருத்துவம்’, ‘வேதகாமத்தில் வேளாண்மை’ உள்ளிட்ட 17 நூல்களையும் இதுவரை எழுதியிருக்கிறார் ராஜ்குமார். இவரது ‘வேளாண்மை நாதங்கள்’ எனும் புத்தகத்தில் இடம்பெற்ற பாடல்கள், இப்போது குறுந்தகடு வழியாகவும் வேளாண் நிகழ்ச்சிகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

ராஜ்குமாரின் சிந்தனைகளில் அவரது மனைவி சாந்திக்கும் ஆழ்ந்த பிடிப்பு உண்டு.

“சின்ன வயதில் நாம் சாப்பிட்ட சத்தான உணவுகள் இன்று இருக்கிறதா? பீட்ஸா, பர்கர் என இந்தத் தலைமுறையினர் நம் பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தில் இருந்து வெகுவாக நகர்ந்து வந்துவிட்டனர். இப்படியான சூழலில் நம் வீட்டில் வீட்டுத்தோட்டம் போட்டு நம் குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அந்தவகையில் என் கணவர் ஒரு ‘அக்ரி டாக்டர்’ என்பதில் எனக்கு எப்போதும் பெருமிதம் உண்டு” என்கிறார் சாந்தி.

மனைவி பேசுவதை அன்பு ததும்பும் கண்களுடன் பார்த்துக்கொண்டே இருக்கும் ராஜ்குமார், “எங்களுக்கு வினோத்ராஜா என ஒரு மகனும், ஜில்னா ஜெரிக்ஸ் என ஒரு மகளும் இருக்கிறார்கள். 2 பேருக்கும் திருமணம் முடிந்து, பேரக்குழந்தைகளும் எடுத்துவிட்டோம். மகன் வினோத்ராஜா துபாயிலும், மகள் ஜில்னா அமெரிக்காவிலும் குடும்பத்தோடு வசிக்கிறார்கள். எங்கள் வீட்டுத்தோட்டத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் பேத்திகள் ஜோஸ்னா, வால்டினா ஆகியோரும் அவரவர் வீடுகளில் தோட்டம் போட்டுள்ளனர். வாட்ஸ்-அப் காலில் அவர்கள் வீட்டுச் செடிகளைக் காட்டுவார்கள். இங்கே வந்திருக்கும்போது தண்ணீர் ஊற்றுவது தொடங்கி, செடிகளில் காய்களைப் பறித்துக்கொடுப்பது வரை போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்வார்கள். சூழல் காப்பின் முக்கியமான ஆயுதம்தான் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் கிச்சன் கார்டன் அமைத்துக்கொள்வது!

நாம் வாழ ஒரு வளமான பூமி இருக்கிறது; ஆரோக்கியமான தண்ணீர் வசதியும், உணவுகளும் இருக்கின்றன எனும் நம்பிக்கை சார்ந்த ஒரு ஆரோக்கியமான சூழலை நமது தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்ல வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கையில்தான் சந்தோஷமே இருக்கிறது” என ஆத்மார்த்தமாக முடிக்கிறார் அக்ரி ராஜ்குமார். “ஆமாம்” என்பதைப் போல அருகில் இருந்து தலையசைக்கிறார் அவர் மனைவி சாந்தி.

இயற்கை போற்றுதும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in