`எனக்கு 85 வயதாகுது; இது நிறைவேறாதுனு விரக்தியில் இருந்தேன்'- முதல்வரிடம் உருகிய விவசாயி

`எனக்கு 85 வயதாகுது; இது நிறைவேறாதுனு விரக்தியில் இருந்தேன்'- முதல்வரிடம் உருகிய விவசாயி

இலவச மின்இணைப்பு தொடர்பாக 85 வயதுடைய தஞ்சை விவசாயி ஒருவர், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காணொலி வாயிலாக உருக்கமாக பேசினார்.

இலவச மின் இணைப்பு பெற்ற உழவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள் என்பவர் உருக்கமாக பேசுகையில், "தமிழக முதல்வர் அவர்களுக்கு எனது மனமார்ந்த பணிவான வாழ்த்துகள். தஞ்சை மாவட்டம், கண்டிதம்பட்டு என்ற கிராமத்தில் உள்ள சிறு விவசாயி நான். நான் 2013-ம் ஆண்டு மின்இணைப்புக்காக பதிவு செய்து காத்திருந்தேன். பதிவு செய்துக் கொண்டிருந்தபோதே இன்னும் 10 ஆண்டுகள் கழித்து மின் இணைப்பு வழங்குவோம் என்று சொன்னார்கள்.

சமீபத்தில் நான் மின்வாரியத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னும் பத்தாண்டு ஆகும் என்று சொன்னார்கள். 85 வயதான நான், என்னுடைய நிலத்துக்கு மின்இணைப்பு பெறுவேனா என்ற சந்தேகத்தில் இருந்தேன். என் வாழ்நாளில் இது நிறைவேறாது என்ற விரக்தியில் இருந்தேன். எனக்கு சமீபத்தில் முதல்வர் அளித்த மாபெரும் மகத்தான திட்டத்தின் மூலம் இந்த மின்இணைப்பு கிடைத்திருப்பதில் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கேட்ட உடனேயே உத்தரவு கிடைக்கப் பெற்றது.

ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்தது என்பது இந்த உலகத்திலேயே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா என்பது அபூர்வம்தான். ஆனால், இந்த நிகழ்ச்சி இங்கு நடந்திருக்கிறது என்று சொன்னால் அது தமிழக முதல்வர் ஒருவரால்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவு கிடைத்தவுடன் மின்சாரிய ஊழியர்கள் தஸ்தாவேஜிக்களை கொண்டு வரச் சொன்னார்கள். அதன் பின்னர் உத்தரவை கொடுத்தார்கள். இந்த உத்தரவை நிறைவேற்ற மின்சாரிய ஊழியர்களின் மகத்தான சுறுசுறுப்பான பணியை நான் பார்த்ததில்லை. அவர்கள் இரவு பகலாக வேலை செய்திருக்கிறார்கள். இது தமிழக முதல்வரின் திட்டத்தினால் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பயன். இந்த திட்டத்தால் நானும் என்னுடைய குடும்பமும்... இல்லை, இல்லை தமிழக விவசாயிகள் பயனடைந்து இருக்கிறோம். இந்த ஆட்சி இன்னும் நீடிக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in