புளி விளைச்சல் அமோகம்: தொடங்கியது புளிச்சந்தை

புளி விளைச்சல் அமோகம்: தொடங்கியது புளிச்சந்தை

தமிழகத்தில் புளி விளைச்சலுக்குப் பெயர் போனது திண்டுக்கல் மாவட்டம். இங்குள்ள நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, தவசிமடை, கோணப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர புளிய மரங்கள் மட்டுமின்றி தோட்டம் போட்டும் புளிய மரங்கள் வளர்க்கப்பட்டு, புளி அறுவடை செய்யப்படுகின்றன.

இவ்வாறு சேகரிக்கப்படும் புளி, ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் வரை விற்பனைக்கு வருவது வழக்கம். இதற்காக திண்டுக்கல் நாகல் நகரில் புளி விற்பனை நடக்கும் இடத்தை புளிச் சந்தை என்றே அழைப்பார்கள். இந்தாண்டிற்கான புளிச்சந்தை இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. முதல் நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இதுகுறித்து புளி வியாபாரி விஸ்வநாதன் கூறுகையில், "பொங்கும் காலம் புளி காய்க்கும், மங்கும் காலம் மாங்காய் காய்க்கும் என்பது பழமொழி. இந்தாண்டு நல்ல செழிப்பு என்பதால், புளிய மரங்கள் அனைத்தும் கொத்துக்கொத்தாய் காய்த்துள்ளன. சந்தைக்கும் நிறைய புளி வந்திருக்கிறது. கொட்டையுடன் கூடிய புளி 1 கிலோ ரூ.70க்கும், கொட்டை எடுத்த புளி ரூ.130க்கும் விற்பனை செய்கிறோம். வெளியூர் வியாபாரிகள் வந்தால்தான் விற்பனை சூடுபிடிக்கும். முதல் நாள் என்பதால், தகவல் கிடைத்திருக்காது. அடுத்தடுத்து வாரங்களில் வியாபாரம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in