அதிமுக முன்னாள் எம்.பி, குமாருக்கு கூடுதல் இனிப்பைத் தந்த கரும்பு!

அதிமுக முன்னாள் எம்.பி,  குமாருக்கு கூடுதல் இனிப்பைத் தந்த கரும்பு!
தனது கரும்பு வயலில் குமார்

குருங்குளம் அண்ணா சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து ‘கரும்பில் அதிக மகசூல் எடுத்த விவசாயி’ என்ற பாராட்டை பெற்றிருக்கிறார், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ப.குமார்.

திருச்சி புறநகர், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருக்கும் ப.குமார் திருச்சி நாடாளுன்றத் தொகுதியிலிருந்து தொடர்ந்து 2முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது சொந்த ஊர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டைக்கு அருகிலிருக்கும் புணல்குளம். இங்கு இவருக்கு வயல், தோட்டம், தோப்பு ஆகியவை உள்ளன. அவற்றில் நெல், கரும்பு, மா, வாழை உள்ளிட்ட பலவகைப் பயிர்களை சாகுபடி செய்துவருகிறார். அவ்வகையில் பத்து ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வருகிறார். அந்த கரும்பை, தஞ்சை மாவட்டம் குருங்குளத்தில் இருக்கும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் விற்றுவருகிறார்.

அண்ணா சர்க்கரை ஆலை ஒவ்வொரு ஆண்டும் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு, பரிசு அளித்து பாராட்டு தெரிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த விவசாயிகள் எட்டு பேரின் பட்டியலை இன்று ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் ப.குமாரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஏக்கருக்கு 70 டன் வீதம் 10 ஏக்கருக்கும் 700 டன் கரும்பை மகசூல் செய்து சாதனை புரிந்திருக்கும் விவசாயி ப.குமாருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ள ஆலை நிர்வாகம், நாளை 22-ம் தேதி அவருக்கு ஆலை வளாகத்தில் பரிசளித்து பாராட்டு தெரிவிக்க உள்ளது.

இதுபற்றி குமாரிடம் பேசினோம். ‘’என்னதான் அரசியல்வாதியாக இருந்தாலும் விவசாயம் தான் நம்மளுக்கு அடிப்படை. அதனால் தான் எல்லா பயிரும் சாகுபடி செஞ்சுட்டு வரேன். கரும்பு சாகுபடி ரொம்ப நாளா செய்றோம். ஆனா, இவ்வளவு அதிக மகசூல் எடுத்ததேயில்லை. இந்தமுறை அந்த ஆலையில்தான் கரும்பு வாங்கி விதைபோட்டேன். அவங்க சொன்னமாதிரியே எல்லாம் செஞ்சோம். அதனால பலன் கிடைச்சிருக்கு.

போன வருசம் 55 டன்னை தாண்டல. ஆனா இந்தவருசம், 70 டன் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்தான். மத்த விவசாயிங்க 60, 65 டன்னைத் தாண்டலன்னு சொல்றாங்க. எங்கபோய் எங்க வந்தாலும் ரெண்டு நாளைக்கு ஒருதடவையாவது கருப்பங்காட்டுக்கு போகாம இருக்க மாட்டேன். அதுக்கு பூமித்தாய் படியளந்துருக்கா” என்று நெகிழ்ச்சியோடு சொன்னார் குமார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் நின்று, அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தோற்றுப்போனார் குமார். அப்போது மக்கள் தராத வெற்றியை இப்போது மண் தந்திருக்கிறது.

Related Stories

No stories found.