விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் - முதல்வர் அறிவிப்பு
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

கனமழை காரணமாகப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இரண்டொரு நாளில் அவரவர் வங்கிக் கணக்கில் நிவாரணத்தொகை வரவு வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய உறுப்பினர்கள் சிலர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசியதாவது:

இந்த அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை உள்ள அரசு. வடகிழக்குப் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள முற்றிலும் விளைந்த குறுவை, சம்பா நெற்பயிர்கள், கீரை வகைகள், எண்ணெய் வித்துகள், சிறுதானியப் பயிர்கள், கரும்பு, தென்னை உள்ளிட்டவை ஒரு லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன. அதற்காக மாநில அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 132 கோடியே 12 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகை இரண்டொரு நாட்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒன்றிய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை. அதனால் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படாது. அதிகாரிகளின் கணக்கெடுப்புக்கு முன்னதாக பாதிக்கப்பட்டிருந்த பயிர்களுக்கு மட்டுமே நிவாரணத்தொகை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர், 2 முறை அதிக மழை பெய்து சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான கணக்கெடுப்புகள் எடுக்கப்படவில்லை.

என்றாலும் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிலருக்கு மட்டுமாவது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட இருக்கும் இந்தக் குறைந்த அளவு தொகை அவர்களின் துயரத்தில் சிறு பங்கைத் தீர்த்து வைக்கும் என்று நம்பலாம்.

Related Stories

No stories found.