`முதல்வர் ஸ்டாலின் இதையும் செய்ய வேண்டும்'

மேகேதாட்டு அணை விவகாரம்; பேரவை தீர்மானத்திற்கு பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு
`முதல்வர் ஸ்டாலின் இதையும் செய்ய வேண்டும்'

மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வரவேற்பும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ``தமிழகத்தில் 12 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 32 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் பாசன நீர் ஆதாரமாகவும் காவிரி விளங்குகிறது. கர்நாடக அரசாங்கம் தன் அரசியல் லாபத்திற்காக தமிழகத்தை பாலைவனமாக்கும் நோக்கோடு மேகேதாட்டு அணையை கட்டி முடிக்க சட்டவிரோதமாக செயல்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி இல்லாமல் கட்ட முடியாது என்று தெரிந்தும், மத்திய அரசின் பின்புலத்தோடு ரூபாய் 1000 கோடியை ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்த தீர்மானத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டு ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருப்பதை விவசாயிகள் சார்பில் நம்பிக்கையுடன் வரவேற்கிறோம். தமிழகம் ஓரணியில் திரண்டுள்ளதை பார்த்து விவசாயிகளிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து கர்நாடக அரசின் நயவஞ்சக நடவடிக்கையை தடுத்து நிறுத்திடவும், மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து காவிரி உரிமையை மீட்டு தமிழக விவசாயிகளை பாதுகாப்பதற்கும் தீவிரமான போராட்டத்தில் களம் இறங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்திடவும், காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்டி கர்நாடக அரசின் மேகேதாட்டு அணை கட்டும் நடவடிக்கை சட்டவிரோதமென அறிவித்திடவும் தமிழக அரசு முன்வர வேண்டும். அதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்கிற நடவடிக்கைகளை தமிழகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஏற்கனவே முடிவெடுத்த அடிப்படையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாளை 22.03.2022 அன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து முறையிட உள்ளேன். மறுநாள் 23-ம் தேதி பிரதமர் அலுவலகத்தில் முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் சட்ட விரோத நடவடிக்கை குறித்து புகார் மனு அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in