`வந்திருக்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; மறுபரிசீலனை செய்யவும்'

பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
`வந்திருக்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; மறுபரிசீலனை செய்யவும்'

``விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ள குடிமராமத்து திட்டத்தை மீண்டும் உடனடியாக செயல்படுத்த வேண்டும்'' என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் திருவாரூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் ஓஎன்ஜிசிக்கு எதிரான போராட்டங்கள் குறித்து போடப்பட்ட வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜரானார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர் பாண்டியன், ``காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா, இயற்கை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று தொடர் போராட்டங்களில் ஈடுபட்டோம். அப்போதைய தமிழக அரசு போராட்டம் நடத்திய விவசாயிகள் அமைப்புகள் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.

தற்போது திமுக தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு அந்த பொய் வழக்குகளை திரும்பப் பெற்றது. சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுமையிலும் குடிமராமத்து திட்டம் இரண்டு வகையில் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. விவசாயிகள் இலவசமாக மண்ணை எடுத்து தனது விளைநிலங்களை சமன்படுத்தி கொள்வதற்கும், நீர்நிலைகள் தூர்வாருவதற்கும் அனுமதிக்கப்பட்டது.

அதேபோல விவசாயிகள் 10 சதவீத பங்களிப்போடு பாசன வடிகால்களை தூர்வாருவதற்கு விவசாயிகள் கொண்ட பாசனதாரர்கள் சபைகள் அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் தூர்வாரும் பணியை மேற்கொண்டனர்.

ஆனால் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் குடிமராமத்து திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் விவசாயிக்கு பயனளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதை கருத்தில்கொண்டு உடனடியாக குடிமராமத்து திட்டத்தைத் செயல்படுத்த நீர்பாசனத்துறை மானிய கோரிக்கையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

கொள்ளிடத்தில் வாய்ப்புள்ள இடங்களில் கதவணைகளை அமைத்து பாசனத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவதோடு, நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். கடல்நீர் உட்புகுவதை தடுக்கக் கோரியும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது. முந்தைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 3 கதவணைகள் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது.

அவை தற்போது நிதி சுமையை கருத்தில் கொண்டு கைவிடப்பட்டுள்ளதாக வந்திருக்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எனவே அதனை மறுபரிசீலனை செய்து உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் வெளியிட்டபடி நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500 விலை நிர்ணயம் செய்து நிபந்தனையின்றி கொள்முதல் செய்வதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in