உள்நோக்கத்துடன் ஓஎன்ஜிசி: எம்பி, எம்எல்ஏக்களை அலர்ட் செய்யும் பி.ஆர்.பாண்டியன்

உள்நோக்கத்துடன் ஓஎன்ஜிசி: எம்பி, எம்எல்ஏக்களை அலர்ட் செய்யும் பி.ஆர்.பாண்டியன்

``சமூக மேம்பாட்டு நிதியின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் எம்பி, எம்எல்ஏக்களை தனக்கு சாதகமாக ஒருங்கிணைக்க ஓஎன்ஜிசி முயற்சிக்கிறது'' என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். ``காவிரி டெல்டாவில் மீண்டும் கச்சா எடுக்கிறோம் என்ற பேரில் ஓஎன்ஜிசி ஹைட்ரோகார்பன், பாறை எரிவாயு ஆகியவற்றை எடுப்பதற்கு மறைமுகமாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக தன்னிடம் உள்ள சமூக மேம்பாட்டு நிதியை (சிஎஸ்ஆர் பண்ட்) கொண்டு நலத்திட்டங்கள் வழங்குகிறோம் என்ற பெயரால் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை தனக்கு ஆதரவான வகையில் ஒருங்கிணைக்க முயற்சிக்கிறது. இதன்மூலம் மக்களை திசைதிருப்ப அந்நிறுவனம் முயற்சிக்கிறது. இதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொண்டு ஓஎன்ஜிசியின் உள்நோக்கத்தை கண்டறிந்து அதன் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த ஒன்றிணைய வேண்டும்.

மே இறுதிக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பது குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு உடனடி அறிவிப்புகளை வெளியிட வேண்டும். கூட்டுறவு கடன், விதை உள்ளிட்டவைகளின் தேவைகளை கணக்கில் கொண்டு முன் திட்டமிடல் மேற்கொள்ள வேண்டும்.

குடிமராமத்து திட்டங்களுக்கு அனுமதி வழங்கிட வேண்டும். இதன் மூலம் ஏரி, குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரி தண்ணீரை சேமிப்பதற்கு வாய்ப்பாக அமையும். மேலும் விவசாயிகள் விளைநிலங்களை மேம்படுத்துவதற்கும் அது உதவிகரமாக அமையும்.

பாசனதாரர் சபைகளை புதுப்பிப்பதற்கு ரூபாய் 50 ஆயிரம் வரை அபராத கட்டணம் விதிக்கப்படுவதால் புதுப்பிக்க முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமக்கு வழங்கப்பட்டுள்ள நிதியைக் கொண்டு கிளை வாய்க்கால்களை தூர்வாரவோ, பராமரிக்கவோ முடியாமல் சபை முடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அபராதம் விதிப்பதை கைவிட்டு கட்டணத் தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு புதுப்பிக்க தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in