விதவிதமாக வெளிநாட்டுக் கோழி!

வியப்பில் ஆழ்த்தும் காவலர் பெருமாள்
எகிப்து நாட்டுக் கோழியுடன் காவலர் பெருமாள்
எகிப்து நாட்டுக் கோழியுடன் காவலர் பெருமாள்

என்னதான் நல்ல பணி, கைநிறைய சம்பளம் என்றாலும் விவசாயத்தில் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானதுதான். விவசாயமும், அதோடு கூடிய பிராணிகள் வளர்ப்பும் வருமான நோக்கத்தையும் கடந்து மனநிறைவையும் கொடுக்கக்கூடியவை. அரசு அல்லது தனியார் பணியில் இருந்துகொண்டே, பிராணிகள் வளர்ப்பில் பிரமாதப்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதிலும் வழக்கமான ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் இருந்து முற்றாக மாறுபட்டு வெளிநாட்டுக் கோழிகளை வளர்த்துவருகிறார், நெல்லை மாவட்ட களக்காடு காவல் நிலையத்தில் முதன்மைக் காவலராகப் பணிபுரியும் பெருமாள். இந்த ரகக் கோழிகள் நம் பாரம்பரிய நாட்டுக்கோழிகளைவிட விவசாயிக்கு இரட்டிப்பு வருமானத்தையும் வழங்குபவை என்பது இன்னும் சிறப்பு!

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ள மூன்றடைப்பு கிராமத்தில் இருக்கிறது பெருமாளின் வீடு. வீட்டைச் சுற்றிலும் ஒரு ஏக்கரில் பல ரக மரங்களையும் வளர்த்துவருகிறார். அதன் ஒருபகுதியிலேயே கோழி வளர்ப்புக்குப் பிரத்யேகக் கூடாரம் அமைத்துள்ளார். அதில் மூன்று வகையிலான வெளிநாட்டுக் கோழிகள் இருக்கின்றன.

ஆர்வம் தோன்றியது எப்படி?

நாம் அங்கு சென்றிருந்தபோது, திறந்தவெளியில் நம் பாரம்பரிய நாட்டுக்கோழி இனங்கள் மேய்ந்துகொண்டிருந்தன. பெருமாள் அந்தப் பக்கமாகச் சென்றதுமே பின்னால் ஓடிவருகின்றன நாட்டுக்கோழிகள். அவற்றை வாஞ்சையோடு தடவிக்கொடுத்துக்கொண்டே நம்மிடம் பேசத் தொடங்கினார்.

’’நான் அடிப்படையில் சட்ட பட்டதாரி. நெல்லை அரசு சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது, காவல் துறைத் தேர்வில் வென்று பணியில் சேர்ந்தேன். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதிலும் இது கிராமப் பகுதி என்பதால் என் சிறு பிராயத்திலேயே என் வீட்டில் கோழி வளர்த்தார்கள். அப்போது வீட்டில் நாட்டுக்கோழி மட்டும்தான் இருக்கும். நானும், என் தம்பியும் வளர வளர வான்கோழி, கின்னிக்கோழி, கருங்கோழி எல்லாம் வளர்க்க ஆரம்பித்தோம். மூன்றாண்டுகளுக்கு முன்புதான் நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு ஏற்ப சில வெளிநாட்டுக் கோழிகளைக்கூட வளர்க்க முடியும் எனத் தெரிந்துகொண்டேன். கேரளத்தில் அப்படி வளர்க்கும் பண்ணைகளையும் நேரில் போய் பார்த்துவந்தேன். அந்த ஆர்வத்தில் வெளிநாட்டுக் கோழிகளை வளர்க்கவும் ஆரம்பித்தேன்” என்கிறார் பெருமாள்.

சவுதி அரேபியா நாட்டுக் கோழி
சவுதி அரேபியா நாட்டுக் கோழி

நம்மூர்க் கோழிகளுக்கு இணையாக நோய் எதிர்ப்பு சக்தி

நம் உள்ளூர் கோழி ரகங்களுடன் எகிப்து நாட்டின் பயோமி, இத்தாலி நாட்டின் சிசிலி தீவைச் சேர்ந்த சிசிலியன் பட்டர்கேப் மற்றும் சவுதி அரேபியா நாட்டைச் சேர்ந்த சவுதி நாடன் ஆகிய நாட்டுக் கோழிகளையும் இவர் வளர்த்துவருகிறார். இவை நாட்டுக்கோழிகளுக்கு இணையாக நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

தொடர்ந்து இதுபற்றிப் பேசிய பெருமாள், “நாம் வழக்கமாகவே நாட்டுக்கோழிகளுக்குப் போடும் அரிசி மாதிரியான உணவுகளையே இவையும் சாப்பிடும். நம் நாட்டு தட்பவெப்பநிலை ஒத்துப்போவதால், இக்கோழிகளுக்கு நோய்களும் பெரிதாகத் தாக்குவது இல்லை. பனிக்காலத்தில் மட்டும் சளிபிடிக்கும். அப்போது குப்பைமேனி, ஆடாதோடா இவற்றில் ஏதாவது ஒரு இலையை மிக்ஸியில் போட்டு அரைத்து, தண்ணீரில் கலந்து வைத்துவிடுவேன். இப்படிச் செய்தாலே சளி தொந்தரவு போய்விடும்” என்கிறார்.

ஜப்பான், அமெரிக்க நாட்டுக்கோழிகளும் இப்போது கேரளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டன. அடுத்தகட்டமாக அவற்றையும் வாங்கிவளர்க்கும் ஆர்வத்தில் இருக்கிறார் பெருமாள். ஆனால் அந்த ரகக் கோழிகள் ஜோடி 40 ஆயிரம் ரூபாய்வரை விலை போவதும், நம்மூர் தட்பவெப்பநிலைக்கு அவற்றின் வளர்ப்பு சாத்தியமாகுமா எனச் சந்தேகம் இருப்பதாலும் இப்போதைக்கு அந்த முடிவைத் தள்ளிப்போட்டிருக்கிறார்.

இத்தாலி நாட்டு சிசிலி தீவு கோழி
இத்தாலி நாட்டு சிசிலி தீவு கோழி

அதிக வருவாய்

நம் பாரம்பரிய இனக் கோழிகளைவிடவும், வெளிநாட்டுக் கோழிகளில் வருவாய் ஈட்டும் வாய்ப்பும் அதிகம் இருப்பதாகச் சொல்லும் பெருமாள், அதுபற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“நம் நாட்டுக்கோழிகள் 600 ரூபாய் விற்கப்படுகின்றன. ஆனால், இப்போது நான் வளர்க்கும் வெளிநாட்டுக் கோழிகள் 1,000 ரூபாய்வரை விலை போகின்றன. இது பெரிய விலை வித்தியாசம் இல்லை. அதேநேரம் மலேசியா நாட்டுக் கோழிகள் 40 ஆயிரம் ரூபாய் வரை ஒரு ஜோடி விலை இருக்கிறது. திடீரென நோய் வந்து இறந்துவிட்டால், நம்மால் பொருளாதாரத்தில் தாக்குப்பிடிக்க முடியாத சூழல் வந்துவிடும். அதனால் அந்தக் கோழி வளர்க்கும் ஆசை இருந்தும், இப்போதைக்கு ஒத்திவைத்துள்ளேன்.

நம் நாட்டுக்கோழி குஞ்சுகளை, ஒரு நாள் குஞ்சு 50 முதல் 60 ரூபாய் வரை தான் விலை வைத்து வாங்குகிறோம். ஆனால், இத்தாலி, எகிப்து, சவுதி அரேபியா நாட்டு ஒருநாள் குஞ்சுக் கோழிகள் 300 ரூபாய் விலை கொடுத்து மூன்று வருடங்களுக்கு முன்புவாங்கினேன். முன்பு கேரளத்தில் மட்டுமே இவை கிடைத்தன. இப்போது கேரளத்திலும், அதையொட்டிய கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்தக் கோழி வளர்ப்பு பரவலாகியிருப்பதால், ஒருநாள் குஞ்சு 100 ரூபாயாக விலை குறைந்துள்ளது.

வெளிநாட்டுக் கோழியின் தோற்றம்
வெளிநாட்டுக் கோழியின் தோற்றம்

நம் பாரம்பரிய நாட்டுக்கோழி முட்டைகள் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை போகிறது. ஆனால் இந்த வெளிநாட்டுக் கோழி முட்டைகள் 50 முதல் 60 ரூபாய்வரை விலைபோகிறது. ஆனால் நான் முட்டையாக விற்காமல் குஞ்சாக விற்கிறேன். ஒரு குஞ்சுக்கு நூறு ரூபாய் கிடைக்கிறது. இதற்காக வீட்டிலேயே இன்குபேட்டரும் வைத்துள்ளேன். எகிப்து நாட்டுக் கோழிகள் ஆண்டுக்கு 150 முதல் 200 முட்டைகளும், சவுதி அரேபியக் கோழிகள் ஆண்டுக்கு 150 முட்டைகளும், இத்தாலி நாட்டுக்கோழிகள் 200 முட்டைகளும் போடும். இது பாரம்பரிய நாட்டுக்கோழிகளைவிட அதிகம். அந்தவகையில் விவசாயிக்கு இதன்மூலம் கூடுதல் வருவாய்க் கிடைக்கும். முட்டைத் தேவைக்காக விற்பதைவிட, குஞ்சாக விற்றால் கூடுதலாக லாபம் கிடைக்கும்” என்கிறார் பெருமாள்.

மேலும், “காவல் பணி என்பது எப்போதும் பரபரப்பாக இயங்கச் செய்வது. அதற்கு மத்தியில் கோழி வளர்ப்பு மனதுக்கும் மிகப்பெரிய இளைப்பாறுதலாக இருக்கிறது. ஆடு, மாடு வளர்ப்பைப்போல் இதற்கு அதிகநேரமும் எடுத்துக்கொள்ளாது. இலகுவாகப் பார்த்துவிடலாம். காலையில் கூடுகளைத் திறந்துவிட்டு அரிசியை தூவிப் போட்டுவிட்டு, மாலையில் அவை மேய்ந்து முடித்ததும் கூடுகளை அடைத்தால் போதும். கூடவே நின்று நாம் கண்காணிக்கும் அவசியமெல்லாம் இல்லை. குஞ்சாக இருக்கும் கோழிகளை மட்டுமே பருந்து, கீரி போன்றவை குறிவைக்கும். எனவே, அவற்றை ஒரு குறிப்பிட்ட பருவம் வரும்வரை கூட்டிலேயே வளர்க்கலாம்” என்றும் பெருமாள் குறிப்பிடுகிறார்.

பாரம்பர்ய நம் நாட்டு நாட்டுக்கோழிகளுக்கு உணவிடும் பெருமாள்
பாரம்பர்ய நம் நாட்டு நாட்டுக்கோழிகளுக்கு உணவிடும் பெருமாள்

கூடவே தன் தோட்டத்தில் சந்தனம், செம்மரம், ஈட்டி, சப்போட்டோ, மா, தென்னை, பலா என 40 வகை மரங்களையும் வளர்க்கிறார்.

“பொதுவாகவே சந்தன மரம், செம்மரம் போன்றவற்றை வீட்டில் வளர்க்கலாமா என்பதே பலருக்குத் தெரியவில்லை. வளர்க்கலாம். அவற்றை நாம் வெட்டும்போது மட்டும் உரிய அனுமதி பெற வேண்டும்” எனச் சொல்லும் பெருமாள், பத்து வகையான வெளிநாட்டுக் கோழிகளையாவது வளர்க்க வேண்டும் எனும் தனது லட்சியத்தை நோக்கி உழைக்கப்போவதாகச் சொல்கிறார்!

கலக்குங்கள், காவலரே!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in