'உபரி நீர் கடலுக்குச் செல்வதை தடுக்க ராசிமணலில் அணை' - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

பி ஆர் பாண்டியன்
பி ஆர் பாண்டியன்

காவிரி உபரிநீர் கடலில் கலப்பதை தடுத்து சேமிக்கும் வகையில் ராசிமணலில் புதிய அணை கட்டும் பணிகளை துவங்க வேண்டும் என்று தமிழக அரசை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று முத்துப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கர்நாடகத்தில் இருந்து வரும் உபரி நீர் மேட்டூரை நிரப்பி விட்டதால் மேற்கொண்டு அந்த நீரை சேமித்து வைக்க முடியாமல் அப்படியே திறந்து கடலுக்கு அனுப்ப வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. காவிரியில் தற்போது ஒன்றேகால் லட்சம் கன அடி உபரிநீர் கடலிலே சென்று கலக்கவிருக்கிறது.

இதனை தடுக்க இயலாது என்பது இயற்கையின் நீதி, அதே நேரத்தில் மேட்டூருக்கு மேலே ராசி மணலில் அணையை கட்டி 64 டிஎம்சி தண்ணீர் தேக்கினால் மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வெளியேறும் உபரி நீரை தடுத்து நிறுத்தி சேமித்து மீண்டும் மேட்டூர் அணை மூலமே பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். இதனை பல ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வெளிச்சந்தையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அரிசிக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் சாதாரண நடுத்தர குடும்பங்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கிறது. மறைமுகமாக விவசாயிகளுக்கு வரி போடும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்துகிறது.

இந்த வரியை வணிகர்களுக்கு விதிப்பதால் வணிகர்கள் விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் நிலையை உருவாக்கிக் கொடுத்து மறைமுகமாக வரியை விவசாயிகள் தலையில் சுமத்துவதற்கான முயற்சியாக மத்திய அரசு மேற்கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என்று பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in