கடன் சுமையில் 50%-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள்

கலங்கவைக்கும் புதிய தகவல்
கடன் சுமையில் 50%-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள்

இந்தியாவின் விவசாயக் குடும்பங்களில் 50 சதவீதத்துக்கும் மேல், கடன் சுமையில் ஆழ்ந்துள்ளன எனும் தகவல் வெளியாகியிருக்கிறது. 2019-ம் ஆண்டு ஜனவரி தொடங்கி டிசம்பர் வரையிலான காலத்துக்கு தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) திரட்டிய தரவுகள் இதைத் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குடும்பத்தின் சுமையும் சராசரி 74,121 ரூபாய் என்றும் அந்தத் தரவுகள் கூறியிருக்கின்றன.

விவசாயிகள் வாங்கிய கடனில் 69.6 சதவீதம் மட்டுமே வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் போன்ற அரசு நிறுவனங்களிடம் பெறப்பட்டவை. 20.5 சதவீதக் கடன்கள் தனியார் மூலம் அதிக வட்டிக்கு வாங்கியவை. விவசாயிகள் பெற்ற கடனில் 57.5 சதவீதம் மட்டுமே விவசாய வேலைகளுக்காகப் பெறப்பட்டவை.

2018-19-ல் விவசாயக் குடும்பங்களின் மாதாந்திர சராசரி வருவாய் 10,218 ரூபாய். இதில் விவசாய வேலைகளுக்கு ஊதியமாகப் பெற்றது 4,063 ரூபாய், பயிர் விளைச்சல் மூலம் பெற்றது 3,798 ரூபாய், கால்நடை வளர்ப்பில் கிடைத்தது 1,582 ரூபாய், விவசாயமல்லாத வருவாய் 641 ரூபாய், நிலத்தைக் குத்தகைக்கு விட்டதன் மூலம் கிடைத்தது 134 ரூபாய்.

மேலும் சில தகவல்கள்:

நாட்டில் உள்ள மொத்த விவசாயக் குடும்பங்கள் 9.3 கோடி. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45.8%, பட்டியல் இனத்தவர் 15.9%, பழங்குடிகள் 14.2%, மற்றவர்கள் 24.1%.

விவசாயம் அல்லாத வேலைகளைச் செய்யும் கிராமப்புற குடும்பங்களின் எண்ணிக்கை 7.93 கோடி. கிராமங்களில் வாழும் குடும்பங்களில் 83.5% சராசரியாக ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலங்களையே சொந்தமாக வைத்திருக்கின்றன. 0.2% குடும்பங்கள் மட்டுமே 10 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு நிலங்களை வைத்திருக்கின்றன.

ஒட்டுமொத்தமாகக் கிராமங்களில் கடனில் ஆழ்ந்துள்ள குடும்பங்கள் 35%, நகர்ப்புறங்களில் 22.4%. வங்கிகள் போன்ற அமைப்பு ரீதியான நிறுவனங்களிடம் கடன் வாங்கியவர்கள் கிராமங்களில் 17.8% குடும்பங்கள். இதுவே நகரங்களில் 14.5%. அமைப்பு ரீதியாக அல்லாமல் தனியார் லேவாதேவிக்காரர்களிடம் கடன் வாங்கிய குடும்பங்கள் கிராமப்புறங்களில் 10.2%. நகர்ப்புறங்களில் அது 4.9%, 7% குடும்பங்கள் வங்கிகள் போன்ற அமைப்புகளிடமும் தனியாரிடமும் கடன் வாங்கியுள்ளன.

கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களின் சராசரி கடன் சுமை ரூ.59,748. நகர்ப்புறங்களில் அதுவே ரூ.1,20,336.

கிராமங்களில் வங்கிகள் போன்றவற்றிடம் வாங்கப்பட்ட ரொக்க கடன்களின் பங்கு 66%. அமைப்பு ரீதியாக அல்லாத தனியார் அமைப்புகளிடம் வாங்கிய ரொக்கக் கடன்கள் 34%.

நகர்ப்புறங்களில் வங்கிகள் உள்ளிட்டவற்றிடம் பெற்ற ரொக்கக் கடன் அளவு 87%, பிற அமைப்புகளிடம் பெற்றது 13%.

2018 ஜூன் 30 கணக்கின்படி கிராமங்களில் வாழும் குடும்பங்களின் சராசரி கடன் அளவு ரூ.1,70,533. நகர்ப்புறங்களில் அது ரூ.5,36,861.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in