ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று

சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மகிழ்ச்சி
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 
ஐஎஸ்ஓ தரச் சான்று

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் பர்லியாறு பண்ணைக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இயற்கை வளத்துக்கும் சுற்றுலா செழிப்புக்கும் பெயர் பெற்றது நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது விவசாயிகளுக்கு நலன் பயப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் துறையாகவும் இருந்து வருகிறது.

ஆண்டுதோறும் நீலகிரிக்கு சுமார் 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நீலகிரியின் சுற்றுலாதலங்களை கண்டு ரசித்துச் செல்கின்றனர். இதனால், சர்வதேச அளவில் நீலகிரி மாவட்டம் புகழ் பெற்றுள்ளது.

இம்மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டில் 5 பூங்காக்கள் மற்றும் 10 தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவை சுற்றுலாத் தலங்களாக செயல்படுவதோடு, விவசாயிகளுக்கு தரமான நடவுப் பொருட்கள் விநியோகிக்கவும் பயிற்சித் திடலாகவும் பயனளிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு, நீலகிரி தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு தாவரவியல் பூங்கா, அரசு ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணை, பர்லியார் ஆகியவை ஐஎஸ்ஓ எனப்படும் உலக தரக்கட்டுப்பாட்டுக் கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பூங்காக்களுக்கு உலகத்தர அங்கீகாரம் கிடைத்துள்ளதால், வரும் காலங்களில் மேலும் பல சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சி பெறுவதுடன், அதைச் சார்ந்துள்ள பல தொழில்களும் மேம்படும். இதனால், சுற்றுலா மற்றும் அதைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.

ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்

இதுகுறித்து நீலகிரி தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் காமதேனு இணையத்திடம் கூறும்போது, “அழகியல் மற்றும் தொழில்நுட்பப் பூங்கா மேலாண்மைக்காக உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கும், பல்வேறு வகையான ரோஜா ரகங்களின் தொகுப்பு மற்றும் வளர்ப்புக்காக உதகை அரசு ரோஜா பூங்காவுக்கும் ஐஎஸ்ஓ 14001 தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கும், தரமான நடவுப் பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்பத் தளமாக விளங்குவதற்காக பர்லியார் அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கும் ஐஎஸ்ஓ 14001 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அந்த அமைப்பினர் பூங்காக்களை ஆய்வு செய்தனர். பூங்காக்களில் வழங்கப்படும் சேவை மற்றும் தூய்மை, பராமரிப்புக்காக ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in