கிலோ 15 ரூபாய் தான்... சின்ன வெங்காயத்தின் விலை வரலாறு காணாத வீழ்ச்சி: வியாபாரிகள் கண்ணீர்!

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

கடந்த சில வருடங்களில் உச்சத்தை தொட்ட சின்ன வெங்காயத்தின் விலை தற்போது வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சமையலில் முக்கிய பங்கு வகிப்பது வெங்காயம். அதிலும் சின்ன வெங்காயத்தை தான் பலரும் விரும்புகின்றனர். இந்நிலையில் தற்போது சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.15க்கு விற்கப்படுகிறது. குறிப்பாக திண்டுக்கல் மொத்த வெங்காயம் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் சின்ன வெங்காயத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் தரத்தை பொறுத்து ரூ. 15 முதல் ரூ.35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயம்

கடந்த திங்கட்கிழமை இதுவரை இல்லாத அளவிற்கு 50 கிலோ எடை கொண்ட சின்ன வெங்காயம் 9,000 மூட்டைகள் விற்பனைக்கு திண்டுக்கல் மொத்த வெங்காய மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. அதிலும் இன்று மட்டும் 5,000 மூட்டைகள் ஏற்றுமதிக்காக வந்துள்ளது.

இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு இங்கிருந்து சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது ஆனால், தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளதால் வெங்காயத்தின் விலை சரசரவென குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகளும்,விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், " கடந்த வாரம் வரை ஆயிரம் அல்லது 2,000 மூட்டைகள் தான் வந்தன. ஆனால் தற்போது 5,000 மூட்டைகளுக்கு மேல் வருகிறது. இங்கிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் இலங்கை, மாலத்தீவு, மலேசியா, சிங்கப்பூர்,துபாய் ஆகிய நாடுகளில் தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் வெங்காய விலை அடி மட்டத்திற்கு போய்விடும். விவசாயிகளுக்காவது பாதி நஷ்டம் தான் ஏற்படும்.எங்களைப் போன்ற வியாபாரிகளுக்கு முழுமையாக நஷ்டம் ஏற்பட்டு விடும். இந்த ஆண்டு சின்னவெங்காயத்தின் மகசூலும், வரத்தும் அதிகரித்துள்ளது. வெங்காயத்தின் வரத்தை நிறுத்திவிட்டால் விவசாயிகள் தான் முழுமையாக பாதிக்கப்படுவார்கள். இன்னும் சில நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளது" என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in