வந்தது நல்ல செய்தி... முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

வந்தது நல்ல செய்தி... முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு  பத்து நாட்களுக்கு முன்னதாகவே  எதிர்வரும் 19-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நமக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை ஆகிய இரண்டு பருவகாலங்கள் தான் தேவைப்படும் மழையைத் தருகிறது.  இதில், வடகிழக்குப் பருவமழை அக்டோபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கி டிசம்பர் இறுதிவரை பெய்யும். தென்மேற்கு பருவமழையைப் பொருத்தவரை ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

தென்மேற்குப் பருவ மழை மே இறுதி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். ஆனால்,  கடந்த ஆண்டு அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை  தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில்  கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே வரும் 19-ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து இந்தியா வானிலை ஆய்வு மையம் முன்கணிப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தென் மேற்கு பருவமழை மே 19ம் தேதிக்குள் தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. 

குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் கேரளாவில் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என்றும்,  சாதகமான கடல் வளிமண்டல காரணிகளால் ஜூன் - செப்டம்பர் இடையே இயல்புக்கு மேல் மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதால் கர்நாடகத்தில் அதிக மழை பொழிந்து அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். அதன் மூலம் மேட்டூர் அணை நிரம்பி இந்த ஆண்டு ஒருபோக சாகுபடியாவது சிக்கலின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, தென்மேற்கு பருவ மழை குறித்த இந்த அறிவிப்பால்  தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in