இயற்கை விவசாய விழிப்புணர்வில் புதிய மைல்கல் #TNBudget2022

இயற்கை விவசாய விழிப்புணர்வில் புதிய மைல்கல் #TNBudget2022

நச்சு பகுப்பாய்வு ஆய்வகத்தால் துளிர்க்கும் நம்பிக்கை

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை பட்ஜெட்டில் சென்னை, திருச்சியில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடு குறித்த, ‘எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள்’ அமைக்கப்படும் என அறிவிப்பு ஒன்றையும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ளார். இது இயற்கை விவசாயத்தை நோக்கிய பயணத்தில் புதிய மைல் கல்லாக அமையும்.

அமைச்சர் பன்னீர் செல்வம் இதுகுறித்து சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிக்கையில், ``பூச்சிக்கொல்லி மருந்து தொடர்பாக உலக அளவில் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு வகையான அளவினை வைத்திருக்கின்றனர். பூச்சிக்கொல்லி மருந்து பயிர்களில் ஏற்படுத்திய நச்சுத்தன்மை குறித்து அறிந்துகொள்ள 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, திருச்சியில் பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வகம் (எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள்) அமைக்கப்படும்'' என அறிவித்தார்.

ரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் மண்ணை மலடாக்கி வருகின்றன என்றுதான் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தன் கடைசிகாலம் வரை போராடி வந்தார். பொதுவாகவே ரசாயன விவசாயிகள் மித மிஞ்சிய அளவில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதாக பொதுவான குற்றச்சாட்டு உண்டு. இதனால் விவசாயிகளின் உற்பத்திச் செலவு கூடுவதோடு மட்டும் இல்லாமல், விவசாயிகளின் மித மிஞ்சிய பூச்சிக்கொல்லி பயன்பாட்டால் வயல், தோட்டங்களில் இருக்கும் நன்மை செய்யும் பூச்சிகளும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. அதேபோல் விளைபொருள்களிலும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய எச்சங்கள் இருப்பதாக தொடர்ந்து இயற்கை நேசர்கள் புகார் பட்டியல் வாசித்துவந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு சென்ற காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக கேரள அரசு வெளிப்படையாகவே குற்றஞ் சாட்டியிருந்தது. அதன் பின்பும் தமிழகத்தில் பயிர்களின் நச்சுத்தன்மை குறித்து பொதுவெளியில் பேசப்படாமலேயே இருந்துவந்தது. இப்படியான சூழலில் சென்னை, திருச்சியில் தமிழகத்தில் முதன் முதலாக எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகம் அமைக்கப்படுகிறது. இதில் தங்கள் விளைபொருட்களை, தங்கள் மண்ணின் தரத்தை அறியும் முனைப்பை விவசாயிகளுக்கு ஏற்படுத்தினாலே, இயற்கை விவசாயம் ஓசையின்றி பரவும் வாய்ப்பு அதிகம்!

Related Stories

No stories found.