கதவணைகள் இல்லாததால் கடலுக்குப் போகுதே தண்ணீர்..!

கண்ணீர் விடும் காவிரி பாசன விவசாயிகள்
மேட்டூரிலிருந்து திறக்கப்படும் உபரி நீர்
மேட்டூரிலிருந்து திறக்கப்படும் உபரி நீர்

ஜுலை மாத இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரையிலும் காவிரியில் திறந்துவிடப்பட்டு வீணாகக் கடலுக்குச் சென்று கலந்த மொத்த நீரின் அளவு 150 டிஎம்சி. இன்னும் பருவ மழைக்காலம் முடியவில்லை என்பதால் இனிமேலும் மேட்டூருக்கு வரும் காவிரி நீர் முழுவதுமே கடலுக்குத்தான் செல்லும். இந்த ஆண்டுதான் என்றில்லை... தென்மேற்கு பருவமழை பொய்க்காமல் பெய்யும் எல்லா வருடங்களிலும் இப்படித்தான் 50 டிஎம்சி முதல் 400 டிஎம்சி வரையிலுமான நீர் வீணாகிறது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஒரு வருடத்துக்கே தமிழகத்துக்கு காவிரியில் கர்நாடகம் தரவேண்டிய நீர் 177.25 டிஎம்சி தான் என்பதைத் தெரிந்து கொண்டால்தான் நாம் சேமிக்காமல் வீணடிக்கும் நீரின் அளவை புரிந்துகொள்ள முடியும். ஒரு டிஎம்சி என்பது 100 கோடி கனஅடி நீர் ஆகும். 1 கன அடி என்பது 28.3 லிட்டர் தண்ணீர் ஆகும். ஒரு டிஎம்சி-யை சேமிக்க வெண்டுமென்றால் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 24 லட்சம் லாரிகள் தேவை. ஒட்டுமொத்த சென்னையின் ஓராண்டுக்கான குடிநீர் தேவைக்கு 12 டிஎம்சி தண்ணீர் இருந்தால் போதும்.

நிலைமை இப்படியிருக்க, ஆண்டுதோறும் இத்தனை டிஎம்சி தண்ணீர் கடலுக்குச்சென்று வீணாகாமல் சேமிக்க என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி பல்லாண்டு காலமாக கேள்வி அளவிலேயே நிற்கிறது. அதற்கு தமிழகத்தின் தலைசிறந்த பொறியாளர்களான ந.நடராஜன், சி.எஸ்.குப்புராஜ், டி.எஸ்.விஜயராகவன், மோகனகிருஷ்ணன், அ.வீரப்பன் போன்றவர்கள் பல ஆய்வுகளைச் செய்து பல திட்டங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு மேலே கதவணைகள் கட்டப்பட வேண்டும் என்பதைத்தான் முதன்மைத் தீர்வாக முன்வைக்கிறார்கள்.

கொள்ளிடம் ஆற்றில் செல்லும் வெள்ளம்...
கொள்ளிடம் ஆற்றில் செல்லும் வெள்ளம்...

கொள்ளிடத்தில் மேலணையில் இருந்து கீழணை வரை, 109 கி.மீ., தூரத்துக்கு, போதுமான இடைவெளிகளில் ஏழு கதவணைகள் கட்டப்பட வேண்டும் என்பது இவர்களின் யோசனை. நொச்சியம், கூகூர், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, காமராசவல்லி, கோடாலி கருப்பூர், அணைக்கரை ஆகிய இடங்கள் அதற்கு சரியாக இருக்கும். இந்த கதவணைகள் மூலம் 44 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அதுமட்டுமில்லாமல் நீர்வரத்து அதிகமிருக்கும் ஜூன் முதல் ஜனவரி வரை ஒவ்வொரு கதவணையிலும் தலா 8 மெகா வாட் வீதம், 56 மெகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த கதவணைகளால் கொள்ளிடத்தின் கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். கடைமடை வரை பாசன வசதி மேம்படும். கீழணை, வீராணம், சேத்தியாதோப்பு அணைகளுக்கு, தொடர்ந்து நீர் வந்த வண்ணம் இருக்கும். இதனால், 2.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது பொறியாளர்களின் கணிப்பு. ஆனால், என்ன காரணத்தாலோ இதை நடைமுறைப் படுத்துவதில் தமிழகத்தை ஆளும் அரசுகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றன.

கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் கட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்ற சிலரின் எதிர்வாதம் அந்த அலட்சியத்திற்கு உதவியாக இருக்கிறது. “அணைகள் கட்ட வேண்டுமென்றால் 171 கி.மீ தூரத்திற்கு கொள்ளிடம் ஆற்றின் கரைகளை உயர்த்த வேண்டும். இப்படி கரைகளை உயர்த்தினால் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தண்ணீரை கொள்ளிடத்திற்கு கொண்டுவர முடியாது. கொள்ளிடம் ஆறு அகன்று விரிந்து இருந்தாலும், கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. அதனால், அணைகள் கட்டினாலும் அதிக நீரைச் சேமிக்க முடியாது” என்பது அந்த சிலரின் எதிர்மறை வாதம்.

ராசிமணல் பகுதி
ராசிமணல் பகுதி

ஆனால், காவிரி பாசனப்பகுதிகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட பொதுப்பணித்துறையின் முன்னாள் மேற்பார்வை பொறியாளர், ஸ்ரீரங்கம் நடராஜன் அப்போதே அதற்கு விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

’’கொள்ளிடம் ஆற்றின் மேலணையானது கடல் மட்டத்தில் இருந்து, 234 அடி உயரத்தில் உள்ளது. கீழணை, 34 அடி உயரத்தில் உள்ளது. இதற்கு இடையில்தான் கதவணைகள் கட்டப்பட வேண்டும். கீழணைக்கு பிறகு பாசனம் இல்லாததால் அந்த தண்ணீர் கடலில் சென்று கலந்தாலும் கவலை இல்லை. கடல் அலை 34 அடி உயரத்திற்கு எழும்பினால்தான் கீழணை பாதிக்கும். கடல் அலை 234 அடி உயரத்துக்கு எழும்பினால்தான் மேலணை பாதிக்கும். இது தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகே, கதவணை கட்ட முடியும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம்” என்பது நடராஜனின் விளக்கம்.

கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள், தடுப்பணைகள் கட்டுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம், காவிரியிலேயே மேட்டூரூக்கு மேலே மேட்டூர் அணையைப்போல இன்னொரு அணை கட்டவேண்டியது மிகமிக அவசியம் என்கிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

’’கர்நாடகம் புதிய அணை கட்ட முயற்சித்துவரும் மேகேதாட்டு அருகே ராசிமணல் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டப்பட வேண்டும். இது இப்போது உதித்த திட்டமில்லை. தமிழ்நாட்டில் பல அணைகளை கட்டிய கர்மவீரர் காமராஜர் எண்ணத்தில் உதித்த திட்டம். இதனைச் செயல்படுத்த அவரது காலத்திலேயே 1961-62-ல் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால் சுமார் 50 முதல் 100 டிஎம்சி தண்ணீரை அங்கு தேக்கி வைக்க முடியும்” என்கிறார் பாண்டியன்.

கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க செல்லும் அதிகாரிகள்...
கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க செல்லும் அதிகாரிகள்...

தமிழக பொதுப்பணித் துறையின் முன்னாள் மேற்பார்வை பொறியாளர் காவிரி நடராஜனும் இந்த திட்டத்தை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்.

“கர்நாடகாவில், 320 கிலோ மீட்டரும் தமிழகத்தில், 416 கிலோ மீட்டரும் இரண்டு மாநிலங்களின் எல்லையைத் தொட்டபடி 64 கிலோ மீட்டர் தூரத்துக்கும் காவிரி ஆறு பயணிக்கிறது. இந்த 64 கி.மீ. தூரத்தில், காவிரியின் வலது கரை கர்நாடக எல்லையிலும், இடது கரை தமிழக எல்லையிலும் அமைந்துள்ளன. அதனால் ஓகேனக்கல்லுக்கு மேலே தமிழகமும் அணை கட்ட வேண்டும். அவ்வாறு கட்டினால், வீணாகும் நீரைச் சேமித்து பாசனத்திற்கும், குடிநீருக்கும் மட்டுமின்றி, மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்த முடியும்” என்பது நடராஜனின் கூற்று.

மொத்தத்தில், காவிரியில் ராசிமணலில் ஒரு அணை கட்டினால் மேட்டூர் அணையில் தேக்கும் அளவுக்கு அதிலும் நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். அதையும் தாண்டி கர்நாடகத்திலிருந்து உபரிநீர் வந்தால் கொள்ளிடத்தில் கட்டப்பட வேண்டிய ஏழு கதவணைகளின் மூலமாக சுமார் ஐம்பது டிஎம்சி யை சேமித்து வைத்துப் பயன்படுத்த முடியும். இதேபோல் காவிரியின் 22 கிளை ஆறுகளிலும் நூற்றுக்கணக்கில் சிறிய கதவணைகள் கட்டப்பட்டால் இன்னும் அதிகமான நீரை வீணாகாமல் சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

இயற்கை கொடையளிக்கும் தண்ணீரை கொடுக்கும் போது வீணடித்துவிட்டு பின்னால் புலம்பாமல் அரசாங்கம் தொலை நோக்கில் சிந்தித்து அணைகளைக் கட்ட முயற்சி எடுக்க வேண்டும். விசாலப் பார்வை என்று சொல்லிவரும் திமுக அரசிலாவது இதற்கு ஒரு விடியல் பிறக்கும் என்று நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in