வந்துவிட்டது நானோ யூரியா… மானிய விலையில் ட்ரோன்கள்; விவசாயிகள், இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வந்துவிட்டது நானோ யூரியா… மானிய விலையில் ட்ரோன்கள்;   விவசாயிகள், இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

விவசாயத் தொழிலாளர்களின் தட்டுப்பாடு காரணமாகத் தமிழகத்தில் முதன் முறையாக ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

நானோ யூரியாவை இந்திய உழவர் உரக் கூட்டு நிறுவனமான இப்கோ கடந்த வருடம் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடி நானோ யூரியாவை குஜராத்தில் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் முதல் முறையாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாங்கி கிராமத்தில் சந்திரசேகர் என்பவரது வயலில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. நானோ யூரியாவின் விலை 240 ரூபாய் என்பதாலும், ஒரு மூட்டை யூரியா தேவைப்படும் இடத்தில் வெறும் அரை லிட்டர் நானோ யூரியா பயன்படுத்தினாலே போதும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நானோ யூரியா தங்கு தடையின்றி கிடைக்க வேளாண்மைத் துறை அனைத்து ஏற்பாடு செய்து உள்ளதாகவும், விரைவில் வேளாண்மை அலுவலகத்தின் மூலம் மானிய விலையில் ட்ரோன்கள் விற்பனை செய்ய மத்திய அரசுத் திட்டம் வகுத்துள்ளதாகவும் வேளாண்மை இணை இயக்குநர் இளங்கோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை சார்பாக பேசிய அதிகாரிகள், “பாரம்பரியமாகப் பயன்படுத்தும் யூரியாவிற்கு மாற்றாக நானோ யூரியா வந்திருக்கிறது. வழக்கமான யூரியாவை பயிருக்கு உரமாக இடும்போது அதில் 30 சதவீதம் யூரியா மட்டுமே, அந்த பயிர் எடுத்துக்கொள்ளும். அதிலிருந்து 3 சதவீத நைட்ரஜன் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். ஆனால் நானோ யூரியாவைப் தெளிக்கும் போது 4 சதவீத நைட்ரஜன் பயிருக்குக் கிடைக்கும். நானோ யூரியா இலை வழியாகப் பயிருக்குச் சென்றடையும்.

இதை இரண்டு மணி நேரத்தில் அந்த பயிரானது எடுத்துக் கொள்ளும். செடிக்குத் தேவையான இடத்தில் நானோ யூரியா தெளிக்கும் போது பயிருக்கு தேவையான வளர்ச்சி கிடைக்கும். ட்ரோன் மூலமாக இன்று நானோ யூரியாவைத் தெளித்துள்ளோம். வேர் மூலமாக யூரியா கொடுக்கும் போது அதிகமாக வீணாகிறது. மேலும் சுற்றுச் சூழலும் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. பாக்டீரியாக்கள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளையும் அழித்துவிடுகிறது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. விரைவில் டிஏபி மற்றும் பொட்டாஷ் சத்துக்களையும் நானோ வடிவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. திரவ வழியில் உரம் தெளிக்கப்படுவதால் ட்ரோனின் பயன்பாடுகள் அதிகரிக்கும். இதனால் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கும் புதிய தொழில் கிடைக்கும்” என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in