62 கிலோ சேனை: குமரி விவசாயி சாதனை!

சேனையுடன் வில்சன்
சேனையுடன் வில்சன்

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு பகுதியில் 62 கிலோ எடையில் சேனை விளைந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் பலரும் இந்த சேனைக் கிழங்கை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்லும் நிலையில், இந்திய அளவில் முந்தைய சாதனைகளையும் இந்தக் கிழங்கு முறியடித்துள்ளது.

திருவட்டாறு அருகில் உள்ள கல்லங்குழி பகுதியைச் சேர்ந்தவர் வில்சன்(72) வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறார். இவரது தோட்டத்தில் சேனை கிழங்கும் பயிரிட்டு இருந்தார். இதற்கு முன்பு, கேரளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது தோட்டத்தில் 56 கிலோ எடைகொண்ட சேனை கிழங்கு விளைந்து இருந்தது. இதுவே இந்திய அளவில் அதிக எடை கொண்ட சேனையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிலையில் வில்சனின் தோட்டத்தில் ஒரு சேனை செடியில் இருந்து 61.70 கிகி எடை கொண்ட சேனை கிழங்கு விளைந்திருந்தது. இயல்பாக ஒரு மூட்டில் இருந்து பத்து முதல் 15 கிலோ வரையில் தான் சேனை காய்க்கும். ஆனால் வில்சனின் தோட்டத்தில் 61.70 கிகி எடையில் சேனை கிழங்கு காய்த்திருப்பதை அறிந்து அந்த சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பலரும் பார்வையிட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி வில்சன் கூறுகையில் “நான் 40 செண்ட் பரப்புள்ள எனது தோட்டத்தில் சில வாழை ரகங்கள் நட்டுள்ளேன். கூடவே கிழங்கு வகையிலும் சேம்பு, சேனை, கூவை கிழங்குகளும் போட்டுள்ளேன். முழுக்கவும் இயற்கை வழி விவசாயம் மேற்கொள்கிறேன். அதனால் இலை தழை, மாட்டுச்சாணம், ஆடு, கோழியின் கழிவுகள் ஆகியவை தோட்டத்தில் போடுகிறேன். என் நிலத்தின் அருகிலேயே குளம் உள்ளது. இதனால் மண் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இவை எல்லாம் சேர்ந்துதான் என் சேனையை 61.70 கிகி எடையாக்கி உள்ளது”என்றார்.

கேரள விவசாயியின் முந்தைய சாதனையை வில்சன் முறியடித்துள்ளதால், லிம்கா சாதனை புத்தகத்தில் வில்சனும் இடம்பெறுவதற்கான முயற்சியை தோட்டக்கலை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in