நாளை திறக்கப்படுகிறது கல்லணை: குறுவை, சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்!

கல்லணை
கல்லணை

காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை நேற்று முன்தினம் ( மே 24) திறக்கப்பட்ட நிலையில் கல்லணை நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னரே காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகி அணை சரசரவென்று நிரம்பியது. அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டிய நிலையில் டெல்டா பாசனத்திற்காக நேற்று முன்தினம் மே 24-ம் தேதி அணை திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அணையை திறந்து வைத்தார்.

அணையிலிருந்து தற்போது 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்தத் தண்ணீர் நாளை காலை கல்லணையை அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை மாலை 5 மணிக்கு கல்லணை திறக்கப்படும் என நீர்ப்பாசனத் துறை சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பழமையான அணையாக கருதப்படும் கல்லணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளின் வாயிலாக பல்வேறு ஆறுகள், வாய்க்கால்கள் வழியாக பாய்ந்தோடி தஞ்சை, நாகை, திருவாருர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படும்.

அணை திறப்பு நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தஞ்சை நீர்வளத்துறை அலுவலகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in