‘70 ஆண்டுகள் காணாத வறட்சி’ - அவசரநிலையை பிரகடனப்படுத்தியது இத்தாலி!

‘70 ஆண்டுகள் காணாத வறட்சி’ - அவசரநிலையை பிரகடனப்படுத்தியது இத்தாலி!

இத்தாலியின் முக்கிய நீர் ஆதாரமான ‘போ’ நதி கடும் வறட்சியை சந்தித்துள்ளதால் அந்த ஆறை சுற்றியுள்ள நகரங்களில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

போ என்பது இத்தாலியின் மிக நீளமான நதியாகும், இது இத்தாலியின் வடக்குப்பகுதிகளில் 650 கிமீ (400 மைல்கள்) க்கும் அதிகமான தூரம் பாய்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் குறைவான மழைப்பொழிவு காரணமாக இந்த ஆற்றின் பல பகுதிகள் வறண்டுவிட்டதால் கடல் நீர் நிலத்தடியில் ஊடுருவி விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பயிர்கள் அழிந்து போகும் சூழல் எழுந்துள்ளது. போ நதி விவசாய படுகை இத்தாலி நாட்டின் விவசாய உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் இந்த ஆறு இப்போது மோசமான வறட்சியை எதிர்கொள்கிறது.

அவசரகால நடவடிக்கைகள் போ ஆறு மற்றும் கிழக்கு ஆல்ப்ஸின் நீர்ப் படுகைகளை ஒட்டிய நிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் அமலாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தாலியின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள எமிலியா, ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய பகுதிகளில் இந்த அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க மக்களுக்கு உதவ ஆரம்பகட்டமாக 36.5 மில்லியன் யூரோக்கள் நிதியை இத்தாலி அரசு ஒதுக்கியிருக்கிறது.

இந்த அவசர நிலை பிரகடனம் மூலம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் தண்ணீருக்கு கட்டுப்பாடு விதிப்பது, ரேஷன் முறையில் தண்ணீர் வழங்குவது போன்ற அதிகாரங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in