விதை விதைக்கலாம் வாங்க!

அழைக்கிறது மக்கள் சக்தி இயக்கம்
விதை விதைக்கலாம் வாங்க!
விதைக்கும் இளைஞர்கள்

பருவமழை பரவலாக பெய்ய ஆரம்பித்திருப்பதால், திருச்சி மாநகரில் மக்கள் சக்தி இயக்கம், ‘விதைகளை விதைப்போம்’ எனும் பெயரில் மர விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக இந்த நாட்களில் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் தான் மழை பெய்யும். அதாவது, இது தென்மேற்கு பருவமழை என்பதால் கர்நாடகம், கேரளப்பகுதிகளிலும் மழைபெய்வது இயற்கை நியதி. ஆனால், கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒட்டுமொத்த தமிழகம் முழுவதுமே மழை பெய்து கொண்டிருக்கிறது.

மத்திய மண்டலத்திலும் மழைக்கு குறைவில்லை. திருச்சியில் பெய்யும் மழையை பயனுள்ளதாக மாற்ற முனைந்திருக்கிறார்கள் மக்கள் சக்தி இயக்கத்தினர். இந்த ஈரப்பதத்தைப் பயன்படுத்தி, மாநகரப் பகுதிகளில் விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் இந்த இயக்கத்தினர்.

சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள்
சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள்

கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருவதால், பூமி குளிர்ந்திருப்பதோடு மட்டுமல்லாமல் ஈரப்பதமும் நிறைந்திருப்பதால் இந்தத் தருணத்தில் விதைகளை விதைத்தால் செடி, கொடிகளும், மரங்களும் விரைவில் துளிர்த்து, வளர்ந்துவிடும். அதனால்தான் இப்போது விதை விதைக்கும் பணிகளை தொடங்கியிருக்கிறார்கள். ஏற்கெனவே தாங்கள் சேகரித்து வைத்துள்ள விதைகளை, இந்த இயக்கத்தின் தன்னார்வ இளைஞர்கள் பொன்மலை மைதானம், பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பணியை ஒருங்கிணைக்கும் மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் நம்மிடம் கூறும்போது, “மர விதைகளை விதைக்க இதுவே பொருத்தமான காலம். இந்த மர விதைகளை தற்போதுள்ள தட்பவெப்பநிலையைப் பயன்படுத்தி மழைக்காலத்துக்கு முன்பாக தரிசு நிலங்களிலும், காடுகளிலும் விதைத்துவிட வேண்டும். மழை பொழியும் போது இவை உயிர் பெற்றுக் கொள்ளும்” என்றார்.

விதைக்கும் பணி
விதைக்கும் பணி

மேலும் பேசிய அவர், ”காக்கை தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக் கடனாக விதைகளை நிலத்தில் எச்சமாக விதைத்துச் செல்கிறது. வேப்பம் பழங்களை விரும்பி உண்ணும் காக்கைகள் மரம் நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறி விடுகின்றன. நாவல், சீதா, இலுப்பை, கொடுக்காய் புளி, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் திண்ணும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களில் இடுகின்றன.

பறவைகளுக்குப் பிடித்தப் பழங்களான அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் விதைகள் வெகுவாக பறவைகளால் பரப்பப்படுகின்றன. பறவை இனம் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அதில் வளர்ந்து மரங்களாகும் விதைகள் சொற்பமே. சரியான சூழ்நிலையும் நீர் வசதியும் கிடைக்கும் விதைகள் மட்டுமே, பல்வேறு பருவநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகின்றன.

கே.சி.நீலமேகம்
கே.சி.நீலமேகம்

எனவே, அடுத்துவரும் கோடை காலத்தில் நமது சுற்றுப்புற இடங்களில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க ஆரம்பித்தால் அதற்கு பிரதிபலனாக அவை விதைகளை தந்துசெல்லும். தாகத்தை தீர்க்க வரும் பறவைகள் அங்கு கழிவுகள் மூலம் விதைகளை விட்டுச்செல்லும். அவை நம் நிலங்களில் மரங்களாகும். வீட்டின் மாடியில் பறவைகளுக்கான உணவும், நீரும் வைக்கும்போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அங்கும் விதைகள் கிடைக்கும்” என்றார்.

Related Stories

No stories found.