அக்.2: குமரி டு டெல்லி சுதந்திரப் பயணம்!

தமிழகத்தில் புதுவடிவெடுக்கும் விவசாயிகள் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, விவசாயிகள் டெல்லியில் 9 மாத காலமாக தொடர்ந்து நடத்தும் போராட்டத்தை ஆதரித்தும், அதை வலுப்படுத்தவும் கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை சுதந்திரப் பயணம் செல்வதாக தமிழகத்தின் பல்வேறு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், இந்தப் பயணத்தை காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ல் நடத்துவதாக தீர்மானித்துள்ளன.

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து, தேசிய அளவிலான விவசாயிகள் கூட்டம் கடந்த 21, 22 ஆகிய 2 நாட்கள் சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி போராட்டத்தை நடத்துகிற அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர்கள் ராகேஷ் திகாயாத், யுத்வீர்சிங், தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங் ஆகியோருடன் தமிழகத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், ‘3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். அதற்காக கன்னியாகுமரி முதல் டெல்லி வரை விவசாயிகள் சுதந்திர பயணம் அக்டோபர் 2-ம் தேதி நடத்துவது’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த காலங்களில் அதிமுக அரசின் பாஜக ஆதரவு நிலையில் தமிழகத்தில் நீர்த்துப் போயிருந்த டெல்லி விவசாயிகள் போராட்டம், புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் செயல்பாட்டால் வேகமெடுக்கும் என்கின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்து, ஆதரவு பெற்றே கூட்டத்தை நடத்துவது என்று ஏற்பாடு செய்திருந்தனர். 2 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அதை செயல்படுத்த முடியாமல் போனது. இருந்தாலும் விவசாயிகளின் இந்த டெல்லி நோக்கிய சுதந்திரப் பயணத்துக்கு திமுகவின் விவசாயிகள் அணியினர் முழு ஆதரவு அளிக்கிறது என தெரிவித்தனர் இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள். இது குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார், இந்த 2 நாள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான, கூடலூர் விவசாயிகள் தொழிலாளர் முன்னேற்ற (விடிஎம்எஸ்) சங்கத் தலைவர் செல்வராஜ்.

செல்வராஜ்
செல்வராஜ்

‘‘டெல்லியில் 9 மாதங்களாக நடக்கும் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு என்னென்னவோ வித்தை எல்லாம் செய்தது. போராட்டக்காரர்களை மாநிலம் விட்டு மாநிலம் வரவே இயலாதபடி பல சிக்கல்களை உருவாக்கியது. போலீஸ் மூலம் அடக்குமுறையைக் கையாண்டது. மிலிட்டரியை நிறுத்தியது. சாலையில் ஆணியடித்து வைத்து வாகனங்களை பழுதாக்கியது. சாலை மறியல் செய்பவர்களுக்கு பல இடையூறுகள் செய்தது. கரோனாவைக் காரணம் காட்டி ஊரடங்குகள் போட்டு கட்டுப்படுத்தியது. நிறைய வழக்குகள் போட்டது. போராட்டக்காரர்கள் இதுவரை 200 பேருக்கு மேல் இறந்தும் உள்ளனர். அப்படியும் இந்த போராட்டம் நடக்கிறதென்றால் எவ்வளவு தீவிரத்துடன் இருக்கும்? இப்பவும் போராட்டக்களத்தில் 40 ஆயிரம் பேர் உள்ளனர். இந்தப் போராட்டத்தை இன்னமும் பலப்படுத்த வேண்டும். 3 வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்கும் வரை விடக்கூடாது என்று தீவிரமாக உள்ளனர்.

அது எல்லா மாநிலங்களிலும் செய்யணும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகள் பிரச்சனைகள் மட்டுமின்றி மீனவர்கள், பழங்குடிகள், நகர்வாழ் மக்கள், மதம், சாதி, இனம் பெயரில் வரும் புதுப்புது சட்டங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களை ஒருங்கிணைக்கும் ஆலோசனைக் கூட்டம் இது. இதில் குமரி முதல் டெல்லி வரை அந்தந்த மாநிலங்களில் உள்ள நகரங்களில் பெருமளவு விவசாயிகள் கூடுவது, தங்கள் அதிருப்திகளை காட்டி போராடுவது, குறிப்பிட்ட பெருவாரியான விவசாயிகள் புறப்பட்டு டெல்லி நோக்கிச் செல்வது, அந்தந்த மாநிலங்களில் ஒன்றிணைந்து கொள்வது என்பதாக முடிவு செய்துள்ளோம். தமிழக அரசு ஏற்கனவே இந்த வேளாண்சட்டத்திற்கு எதிராக உள்ளது. அதையும் இந்த ஒருங்கிணைப்பாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவு டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் போராட்டம் புது வடிவம் எடுக்கும்!’’ எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.