முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு: வெள்ள அபாய எச்சரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்துவந்த கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. 142 அடி கொள்ளளவு கொண்ட அணையில் இன்று மதியம் நிலவரப்படி 138.2 கன அடி நீர்மட்டம் உள்ளது. அதனால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4-ம் தேதியன்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடி ஆகவும், நீர் வரத்து 6143 கன அடி ஆகவும் இருந்தது. அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டியது. முல்லை பெரியாற்றில் ஆகஸ்ட் 10 வரை அணை நீர்மட்டம் 137.50 அடியாக நிலை நிறுத்திக்கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கேரளத்திற்கு நீர் திறந்து விடுமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி இருந்தார். அதனையடுத்து முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு முதல் கட்டமாக மூன்று ஷட்டர்கள் வழியாக 534 கன அடி நீர் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து நீர் திறப்பு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு வந்தது.

தற்போது அணையின் நீர்மட்டம் 138.2 அடியாக உயர்ந்துள்ள நிலையில் அணையில் இருந்து 10 மதகுகள் வழியாக தற்போது 3,119 கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இடுக்கி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in