2-வது நாளாக டெல்டா மாவட்டங்களில் ஆய்வு: தூர்வாரும் பணிகளை வேகப்படுத்தும் முதல்வர் ஸ்டாலின்

நெல் விதைக்கும் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் விதைநெல் தூவுகிறார்.
நெல் விதைக்கும் பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் விதைநெல் தூவுகிறார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறு, குளங்கள், ஏரிகள் ஆகியவற்றின் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.

இருப்பு அதிகம் இருந்ததாலும் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழையாலும் இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பியது. அதனால் மே 24-ம் தேதி மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசன பகுதிகளின் விவசாயத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்ணீர் தடையின்றி கடைமடை வரை செல்வதற்காக ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகளை தூர்வாருவதற்காக தமிழக அரசால் 80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வாரப்படுகின்றன. இதுவரை 4,000 கி.மீ. தூர்வாரப்பட்டு உள்ள நிலையில் மேலும், 900 கி.மீ.க்கு மேல் தூர்வார வேண்டியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

இப்படி மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை அதிரடியாக நேரில் சென்று ஆய்வு செய்வதாக முடிவு எடுத்த முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் திருச்சிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து தஞ்சை மாவட்டத்துக்கு வந்த அவர் பீமனோடை வடிகால் வாய்க்காலில் ரூ.14.50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்ட தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அத்துடன் மேலும் சில இடங்களை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சென்று இரவு அங்கேயே தங்கினார். வழி நெடுகிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் முதல்வர் மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.

இன்று 2-வது நாளாக தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக காலையிலேயே புறப்பட்டார் முதல்வர். காலை 9 மணிக்கு வேளாங்கண்ணி அருகே உள்ள கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தவர் அடுத்ததாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அனந்தமங்கலம் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு பணியினை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நல்லாடை சென்றவர், நெல் இயந்திர நடவு ஆகிய பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டம் பேரளத்தை அடுத்த கொத்தங்குடியில் நடைபெற்ற தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சென்றவர் காட்டூரில் மறைந்த முதல்வர் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் மதிய உணவு உண்டு ஓய்வெடுத்துக் கொள்கிறார். மாலை 4 மணிக்கு திருவாரூரில் இருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

முதல்வரின் இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என் நேரு, எ.வ வேலு, எம்ஆர்கே பன்னீர் செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in