வேளாண் நிதிநிலை அறிக்கையில் அரசு செய்ய வேண்டியது என்ன?

பட்டியலிடும் விவசாய சங்க தலைவர்கள்!
பைல் படம்
பைல் படம்

கடந்த ஆண்டு முதல் முறையாக வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது 2022-23-ஆம் ஆண்டு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த அறிக்கையில் பல்வேறு கோரிக்கைகளை இணைக்க வேண்டும் என்று விவசாய சங்க, விவசாயத் தொழிலாளர் அமைப்புகள், கட்சியினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

டில்லிபாபு
டில்லிபாபு

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் பி.டில்லிபாபுவிடம் கேட்டபோது, 'தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கான கடன் முன்னுரிமை வழங்க முன்னுரிமை வழங்க வேண்டும். அதற்கு எவ்வளவு ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு கட்டாயம் இடம் பெற வேண்டும். அதே போல, பயிர்க்கடனுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். நெல் கொள்முதலில் உள்ள ஆன்லைன் முறையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.

'நெல்கொள்முதலில் ஆன்லைன் முறை இல்லையென்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்களே? ' என்று நாம் கேட்டதற்கு, 'இந்த முறையை எதிர்த்து 20 மாவட்டங்களில் போராட்டம் நடத்தியுள்ளோம். ஆனால், ஆன்லைன் முறை இல்லை என கிளிப்பிள்ளையைப் போல் அதிகாரிகள் சொல்லி வருகிறார்கள். பிறகெதற்கு நாங்கள் போராடப் போகிறோம்? எனவே, நெல் கொள்முதலில் ஆன்லைன் முறை இல்லையென்பதை அரசு நிதிநிலை அறிக்கையில் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

அத்துடன் நெல்கொள் முதல் நிலையங்களில் நிறைய மாற்றங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு இந்த நிதிநிலை அறிக்கை உதவ வேண்டும். குறிப்பாக, மழைக்காலங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை பாதுகாக்க முறையான குடோன்கள் இல்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான ரூபாய் நெல்மூட்டைகள் நாசமாகின்றன. இதனால் விவசாயிகள் பெருமளவு நஷ்டமடைந்து வருகின்றனர். எனவே, அவர்களைக் காக்கின்ற அறிக்கையாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்க வேண்டும்' என்று பி.டில்லிபாபு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், 'ஏரி,குளங்களை ஆழப்படுத்த உரிய நிதியை அரசு ஒதுக்க வேண்டும். கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்களில் அந்தந்த கிராம மக்களின் பங்களிப்போடு ஏரி, குளங்களைத் தூர் வார வேண்டும். இதைக் கண்காணிக்க விவசாயிகளின் பங்களிப்போடு மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழுவை அமைக்க வேண்டும். காவிரி, குண்டாறு, வைகை, தாமிரபரணி, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து முடிக்க இந்த வேளாண் அறிக்கையில் உத்திரவாதம் தர வேண்டும். விவசாயிகள் மின் இணைப்பு கேட்டு கடந்த 2004-ஆம் ஆண்டில் இருந்து காத்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்க வேண்டும். மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். குறிப்பாக, மீனவர்களுக்கு மீன்பிடிக்காத ஆறுமாத காலம் நிவாரணம் வழங்கப்படுவது போல, குமரிமாவட்டத்தைச் சேர்ந்த தேனீ வளர்ப்போருக்கும் நிவாரணம் வழங்குவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை துணை செய்ய வேண்டும்' என்றார்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியிடம் வேளாண் நிதி நிலை அறிக்கை குறித்து கேட்டதற்கு, 'கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட் வேளாண் நிதிநிலை அறிக்கை தனி என்பதைத்தவிர வேறு விசேஷம் அதில்லை' என்றார். அதற்கு அவர் கூறிய காரணம், கரோனா காலம் என்பதால் நிதி ஒதுக்கீடு இல்லை என்பது தான்.

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ள இந்த நிதிநிலை அறிக்கை தான் முழுமையானது. அரசியல் சட்டத்தை மதித்து கள்ளுக்கான தடையை நீக்குவது குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று கூறிய நல்லசாமி, உலகத்தில் எந்த நாட்டிலும் கள்ளுக்குத் தடை கிடையாது. ஆனால், தமிழகத்தில் இந்த தடை 33 ஆண்டுகளாக தொடர்கிறது. எனவே, கள்ளுக்கான தடையை நீக்கி பாதுகாப்பு வழிமுறைகளோடு விற்பனை செய்ய அனுமதி வழங்க இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வேளாண் தனி பட்ஜெட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு, 'வேளாண் பட்ஜெட் என்று சொல்லப்பட்டாலும் அது விவசாயிகளுக்கான பட்ஜெட்டாக இருப்பதில்லை. விவசாயிகள் கஷ்டப்பட்டு உற்பத்தி செய்வதை அரசு சந்தைப்படுத்துவதில்லை. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து பாமாயிலை அரசு இறக்குமதி செய்து ரேஷன்கடைகளில் வழங்குகிறது. இதற்கு அரசு மானியமும் வழங்குகிறது. ஆனால், நமது விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை வாங்குவதும் இல்லை. சந்தைப்படுத்தும் இல்லை. இதற்கு மானியமும் கிடைப்பதில்லை. ஆனால்,வெளிநாட்டு கம்பெனிக்காரனிடமிருந்து பாமாயிலை சந்தைப்படுத்த முடிகிறது. யாரிடம் ஓட்டு வாங்கி யாருக்கு இவர்கள் வேலை செய்கிறார்கள்? எனவே அதிமுக, திமுகவோ அது விவசாய விரோத அரசாகத்தான் இருக்கிறது.

போன அதிமுக ஆட்சியில் கள்ளுக்கான தடையை நீக்கச் சொன்ன போது, நீரா பானத்தை விற்பனை செய்ய அனுமதி தந்தார்கள். திமுக அரசிடம் கள்ளுக்கான தடையை நீக்கச் சொன்னோம், ரேஷன் கடையில் கருப்பட்டி தருகிறோம் என்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்கள் தான் கள்ளுக்கு தடை நீடிக்கப்போகிறது என்று தெரியவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையிலாவது அதற்கு விடை கிடைக்குமா என காத்திருக்கிறோம் என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in