`பணம் இருந்தால்தான் பாசன நீர் கிடைக்குமா... இதுதான் சமநீதியா?- தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

``சட்டவிரோதமான, இயற்கைக்கு எதிரான, நீர்ப்பாசன விதிகளை மீறிய வகையில் நீரேற்று பாசன சங்கம் அமைத்து சிலர் காவிரி நீரை இறைப்பதை அரசு தடுக்க வேண்டும்'' என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் தலைமடை பாசன மாவட்டங்களில், சிலர் சட்டவிரோத அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலமாக காவிரி ஆற்று நீரை எந்த அனுமதியும் இல்லாமல் தங்களின் நிலங்களுக்கு கொண்டு செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகம் இழைக்கும் அநீதிக்கு இணையான இந்த செயல் உழவர்களை கடுமையாக பாதிக்கும். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் காவிரி ஆற்றிலிருந்து பாசனக் கால்வாய்கள் மூலமாக விவசாய நிலங்களுக்கு நேரடியாக தண்ணீர் வழங்கப்படுகிறது. சில இடங்களில் காவிரி நீர் ஏரி, குளங்களில் நிரப்பப்பட்டு, அவற்றின் மூலம் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த வசதிகள் இல்லாத இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் மோட்டார்களைக் கொண்டு நீர் எடுக்கப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. இவை தான் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நியாயமான பாசன முறைகள் ஆகும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தலைமடை பாசன மாவட்டங்களில் புதிய பாசன கலாச்சாரம் பரவி வருகிறது. அந்த மாவட்டங்களில், பாசன வசதி ஏற்படுத்தப்படாத பகுதிகளைச் சேர்ந்த அரசியல் செல்வாக்குள்ள சிலர் ஒன்று சேர்ந்து ‘வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம்’ என்ற பெயரில் சங்கத்தை உருவாக்கி, அதில் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்க்கின்றனர்.

அந்த சங்கத்தின் மூலம் காவிரி ஆற்றிலிருந்து இராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, செயற்கையாக உருவாக்கப்பட்ட அணை போன்ற கட்டமைப்பில் நிரப்பப்படுகிறது. அங்கிருந்து சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ள ஒவ்வொருவரின் நிலத்திற்கும் 2.5 அங்குலம் விட்டம் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. இத்தகைய தண்ணீர் இணைப்பைப் பெறுவதற்காக தொடக்க நிலை உறுப்பினர் கட்டணமாக ரூ.20 லட்சம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நீரேற்று பாசன திட்டத்திற்கு உழவர்களிடம் வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், இது சட்டவிரோதமான, இயற்கைக்கு எதிரான, நீர்ப்பாசன விதிகளை மீறிய செயலாகும். இந்த முறை உடனடியாக தடை செய்யப்பட வேண்டும்.

பாசன வசதி இல்லாத நிலங்களுக்கு, பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் தண்ணீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டியது மிகவும் அவசியம். அதை செய்து தர வேண்டியது அரசின் கடமை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், பொதுச்சொத்தான காவிரியில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வழங்கும் அதிகாரமும், கடமையும் தமிழ்நாட்டில் தமிழக அரசுக்கு மட்டும் தான் உள்ளது.

அதற்கு பதிலாக வட்டார விவசாயிகள் நீரேற்று பாசன சங்கம் என்பன போன்ற அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் விருப்பம் போல காவிரி நீரை எடுப்பது நியாயம் அல்ல. தலைமடை பாசனப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இவ்வாறு தண்ணீரை எடுத்தால் காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீரே கிடைக்காத நிலை உருவாகிவிடும்.

கர்நாடகத்தின் மீது தமிழ்நாடு அரசு முன்வைக்கும் மிகப்பெரிய குற்றச்சாட்டு, காவிரி ஆற்று நீரை கணக்கில் காட்டாமல் ஏரி, குளங்களில் சேமிக்கிறது என்பது தான். குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்துச் செல்வதும் அதே போன்ற குற்றம்தான். அதை உழவர்கள் ஒரு போதும் செய்யக்கூடாது.

அதுமட்டுமின்றி, இத்தகையத் திட்டங்கள் உழவர்களிடம் பெரும் ஏற்றத்தாழ்வுகளை விதைக்கின்றன. ஓர் இணைப்புக்கு ரூ.20 லட்சம் செலுத்த வசதியுள்ள உழவர்களால் தான் இத்தகைய இணைப்புகளை பெற முடிகிறது. அவர்களின் நிலங்கள் இதன் மூலம் கிடைக்கும் தண்ணீரால் செழித்து வளர்கின்றன. அதே நேரத்தில் அவர்களின் நிலங்களுக்கு அருகிலும், குழாய் பாதை செல்லும் வழியிலும் நிலம் வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் கிடைக்காததால் அவை காய்கின்றன.

காவிரி நீர் அனைவருக்கும் பொதுவானது; அது அனைவருக்கும் பயன்பட வேண்டும். மாறாக பணம் இருந்தால் பாசன நீர் கிடைக்கும்; பணம் இல்லாவிட்டால் கிடைக்காது என்ற நிலை இருப்பது சம நீதியுமல்ல... சம வாய்ப்பும் அல்ல. இப்படி ஒரு நிலை நிலவுவதை தமிழக அரசு கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் தான் மேட்டூர் அணை அமைந்திருக்கிறது என்றாலும் கூட, அம்மாவட்டத்தில் உள்ள பாசன நிலங்களுக்கு காவிரி நீர் கிடைப்பதில்லை. அந்தக் குறையைப் போக்குவதற்காகத் தான் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர் அய்யா போராடினார்கள். அதன்பயனாக முழுமையாக இல்லாவிட்டாலும், 100 பாசன ஏரிகளை நிரப்பும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேட்டூர் அணை நிரம்பிய பிறகு வீணாக வழிந்தோடும் தண்ணீர் தான் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப் படுகிறது என்பதால், காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்தகைய பாசனத் திட்டங்களின் மூலம் தான் பாசன வசதி இல்லாத பகுதிகளின் நிலங்களுக்கான பாசனத் தேவைகளை நிறைவேற்ற முடியும்.

மேட்டூர் உபரி நீர் திட்டத்தையும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்துதல், தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் பாசனத் தேவைகளை நிறைவேற்ற முடியும். எனவே, இந்தத் திட்டங்களை செயல்படுத்தவும், அதே நேரத்தில் தலைமடை பாசன மாவட்டங்களில் காவிரியிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீர் இறைக்கப் படுவதை தடை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in