கிளம்புகிறது பூதம்... கிளப்புவது யார்?

மீண்டும் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக வெடிக்கும் விவசாயிகள்!
கிளம்புகிறது பூதம்... கிளப்புவது யார்?

மக்களின் எதிர்ப்பால் வாலைச் சுருட்டிக்கொண்டிருந்த ஹைட்ரோ கார்பன் பூதம் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக வாலை ஆட்டத் தொடங்கியிருக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுடி, அடியக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி மீண்டும் சட்டவிரோதமாக எரிவாயு எடுக்க முயற்சிப்பதாக விவசாயிகள் வெடித்துக் கிளம்பியிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மீத்தேன் போராட்டங்கள், கதிராமங்கலம், நெடுவாசல் என எப்போதும் டெல்டா மாவட்டங்கள் போர்க்களமாகவே காட்சியளிக்கும். இது மட்டுமின்றி திருவாரூர், நாகை மாவட்டங்களில் அடிக்கடி ஏற்படும் எரிவாயு குழாய் வெடிப்பு, விபத்து போன்ற சம்பவங்களும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும்.

2020-ல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் நிம்மதியானார்கள். 2016-க்கு முன், அனுமதிபெற்ற கிணறுகள் தவிர்த்து காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டது. இதனால் போராட்ட நெடி ஏதுமின்றி அமைதியான மூச்சுக்காற்றை இரண்டு மூன்று ஆண்டுகளாக மக்கள் சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் மீண்டும் டெல்டா மக்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் செய்திகள் கலங்கடிக்கத் தொடங்கியுள்ளன.

மன்னார்குடி அருகே உள்ளது பெரியகுடி. இங்கே 2013-ல் மூடப்பட்ட எண்ணெய் கிணற்றைத் திறக்க கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தவுள்ளதாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியாகி பெரும் பரபரப்பானது. இதை எதிர்த்து கண்டனங்கள் பறக்கவும் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதிகளில் நாசகார திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே பல முறை அறிவித்துள்ளார். தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனும், “விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் இங்கே அனுமதியில்லை” எனச் சொல்லி வருகிறார். அப்படியானால் மாநில அரசின் ஒப்புதலின்றி மன்னார்குடி ஆர்டிஓ வழிகாட்டுதலோடு பெரியகுடி எண்ணெய் கிணறு தொடர்பான கலந்தாலோசனைக்கூட்ட அறிவிப்பு எப்படி வெளியானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இப்படித்தான் கடந்த ஆண்டு திடீரென நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகள் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததாக செய்தி வெளியானது. அதனை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராட்டம் நடத்தியதால் தமிழக முதலமைச்சரே நேரடியாகத் தலையிட்டு, “அவ்வாறு அறிவித்தது தவறானது” என திரும்பப் பெற்றார். பெரியகுடி கருத்துக் கேட்புக் கூட்ட அறிவிப்பு இரண்டாவது சம்பவம் என்று சொல்லும் விவசாயிகள், “அப்படியானால் டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி, எண்ணெய் எரிவாயு திட்டங்கள் தொடர்பாக முதல்வருக்கே தெரியாமல் மாவட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இது தொடர்பாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியனிடம் பேசினோம், “ காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் டெல்டாவில் பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே பெரியகுடியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான கிணறு தோண்டப்பட்டது. 2013-ல் அந்தப் பணி நிறைவடையும் நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் உடனடியாக அந்தக் கிணறுக்கு தடை விதிக்கப்பட்டது.

2014-ல் இக்கிணற்றை திறக்க எடுத்த முயற்சிகளையும் முறியடித்தோம். 2021-ல் மீண்டும் இந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ஓஎன்ஜிசி மேற்கொண்ட போது, மன்னார்குடி கோட்டாட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முன்னிலையில், அக்கிணற்றுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது. இந்தச் சூழலில், இப்போது திடீரென கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார் அவர்.

பெரியகுடி விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் இதில் தலையிட்ட தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “பழைய கிணறு அல்லது புதிய கிணறு மூலம் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கமாட்டோம். பெரியகுடி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறு பேரழிவு ஏற்படுத்தும் என்பதால் அதனை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்” என அறிவித்தார். அமைச்சரின் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்தநாளே அந்த ஆறுதல் தவிடுபொடியானது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

இது பற்றியும் பேசிய பி.ஆர்.பாண்டியன், “பெரியகுடி விவகாரம் குறித்து விவசாயிகள் பங்கேற்ற கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மன்னார்குடி கோட்டாட்சியர் ஆகஸ்ட் 3-ம் தேதி ஏற்பாடு செய்தார். அதில், பெரியகுடி கிணற்றை மூட உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினோம் அதனை ஏற்க ஓஎன்ஜிசி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆர்டிஓ தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வருவாய்த் துறை அதிகாரிகள் ஓஎன்ஜிசிக்கு துணை போவது போல அப்பட்டமாகச் செயல்பட்டனர்.

எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது ஆர்டிஓ கீர்த்தனாமணிக்கு போனில் ஏதோ அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது. அந்த அதிகாரி என்னிடம் தொலைபேசியில், ஓஎன்ஜிசியால் என்ன பாதிப்பு, ஏன் இதனை எதிர்க்கிறீர்கள் என கேட்கிறார். இவ்வளவு வெளிப்படையாகவே விவசாயிகளுக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டார்கள். இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது? முதலமைச்சரின் உத்தரவை மீறியும் அதிகாரிகளை செயல்படவைக்கும் அரசியல் சக்தி எது என்ற கேள்வி இப்போது எழுகிறது.

இதுவரை மத்திய அரசுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்தி வருகிறோம். அடுத்து, மாநில அரசுக்கு எதிராகவும் போராட வேண்டிய நெருக்கடியை இந்தக் கூட்டம் உருவாக்கியுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக கட்சியில் உள்ள ஆளுமை படைத்த யாரோ ஒருவர் டெல்டாவில் நாசகார திட்டங்களை செயல்படுத்தி பெரும் வருமானத்தை ஈட்ட திட்டம் தீட்டியுள்ளதாகவே தெரிகிறது.

மன்னார்குடி கருத்துக் கேட்பு கூட்டம்...
மன்னார்குடி கருத்துக் கேட்பு கூட்டம்...

இதற்கு முன்பு இந்தக் கிணற்றை திறக்க முயற்சி நடந்த போதெல்லாம் அதிகாரிகள் எங்களுக்குச் சாதகமாகவே செயல்பட்டார்கள். ஆனால் இப்போது எங்களுக்கு எதிராகவும், ஓஎன்ஜிசிக்கு ஆதரவாகவும் வெளிப்படையாகவே நிற்கிறார்கள். இதே நிலை நீடித்தால் திமுக அரசுக்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மீத்தேன் திட்டத்தினால்தான் 2011 மற்றும் 2014 தேர்தல்களில் டெல்டாவில் திமுக பெரும் தோல்வியை தழுவியது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எந்த வழியிலாவது மீண்டும் செயல்படுத்த முயன்றால் திமுக மீண்டும் அதே தோல்வியை சந்திக்கும்” என எச்சரித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், “டெல்டாவில் மொத்தம் 712 ஓஎன்ஜிசி கிணறுகள் உள்ளது. இதில் 189 கிணறுகள் மட்டுமே தற்போது இயங்குவதாக அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்டுள்ள காவிரிப் படுகையில் விதிமுறைகளையும், சட்டத்தையும் மீறி, எண்ணற்ற பொய்களைச் சொல்லி எண்ணெய்க் கிணறுப் பணிகளை நடத்திட ஓஎன்ஜிசி தொடர்ந்து முயன்று வருகிறது.

திருவாரூர் அடியக்கமங்கலம் அருகே உள்ள கல்லுக்குடியில் நூற்றுக்கு 26 பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம், ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறுதான். அடியக்கமங்கலத்தில் உள்ள கிணறு பயனற்றது என கைவிடப்பட்டது. ஆனால், கடந்த 10 நாட்களாக அங்கே ஓஎன்ஜிசி புதிய வேலைகளை தொடங்கி நடத்தியது. மராமத்து என்ற பெயரில் மேலும் அதிக ஆழமான கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி முயற்சி செய்தது. அதை அமைச்சர், அதிகாரிகளின் உதவியுடன் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

ஜெயராமன்
ஜெயராமன்
அடியக்கமங்கலம் ஓஎன்ஜிசி பணிகள்...
அடியக்கமங்கலம் ஓஎன்ஜிசி பணிகள்...

தமிழக முதல்வர் கண்ணை இமை காப்பதுபோல விவசாயிகளை காப்போம் என்கிறார். அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய் கிணறுக்கு அனுமதிகோரிய ஓஎன்ஜிசியின் விண்ணப்பத்தை நிராகரித்ததாக அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்திலேயே அறிவித்தார். எனவே, தமிழக அரசு எண்ணெய் எரிவாயு பிரச்சினையில் சரியாக இருப்பதாகவே நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் புதிய கிணறுகளை அமைக்க வழியில்லாமல் பழைய கிணறுகளை மராமத்து என்ற பெயரில் ஆழப்படுத்தும் பணிகளை இப்போது ஓஎன்ஜிசி செய்கிறது.

குத்தாலம் அருகே உள்ள அஞ்சாறுவாருதலையில் ஏற்கெனவே உள்ள கிணற்றில் மராமத்து என்ற பெயரில் அதிகளவிலான குழாய்கள் மற்றும் ரசாயனங்களை கொண்டுவந்து இறக்கினார்கள். சுற்றுச்சூழல் அமைச்சர் தலையிட்டு இதை தடுத்து நிறுத்தினார். இதேபோல மல்லியம், திருவேள்விக்குடியிலும் பழைய கிணறுகளில் உரிய அனுமதி இல்லாமல் புதிய வேலைகளை தொடங்க ஓஎன்ஜிசி முயற்சித்தது. அதையும் தடுத்து நிறுத்தினோம். இப்போது நடக்கும் சில பிழைகளுக்கு அதிகாரிகளே காரணம். ஓஎன்ஜிசி உள்ளிட்ட எந்த எண்ணெய் நிறுவனமும் காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாயுக் கிணறுகள் அமைக்கவோ, புதுப்பிக்கவோ, உயிர்பிக்கவோ தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது” என்று சொன்னார்.

”ஓஎன்ஜிசி என்னதான் தலைகீழாக நின்றாலும் மாநில அரசின் தயவில்லாமல் எண்ணெய்க் கிணறுகளை திறக்க முடியாது. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு உறுதியான தெளிவான முடிவை அறிவித்துவிட்டால் நாங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக இருப்போம்” என்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

அதற்கு முன்வருமா தமிழக அரசு?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in