'மண்வாசனை கிராமியத் திருவிழாவை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்!'

பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்
'மண்வாசனை கிராமியத் திருவிழாவை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்!'
கிராமியத் திருவிழாவில் பி.ஆர் பாண்டியன்

சென்னை தியாகராய நகர் தக்கர்பாபா கல்வி நிறுவனத்தில் மண்வாசனை அமைப்பின் சார்பில் மண்வாசனை கிராமிய திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இத்திருவிழாவில் பாரம்பரிய வேளாண் உணவு பொருட்கள், மூலிகை மற்றும் உணவு வகைகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

சென்னை மாநகரத்தைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்கள் இந்தக் கிராமிய திருவிழாவில் பங்கேற்று சிறப்பித்தனர். பாரம்பரிய கிராமியக் கலைகளை வெளிப்படுத்தும் விதமாக பறையாட்டம், ஆடல், பாடல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கிராமிய திருவிழாவிற்கான ஏற்பாட்டினை மண்வாசனை அமைப்பின் பெண் இயற்கை விவசாயப் போராளி மேனகா செய்திருந்தார். இதில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது பாராட்டுக்குரியது. குமரி முதல் சென்னை வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை இங்கு காட்சிபடுத்தி உள்ளனர். ஒவ்வொரு உணவுப் பொருட்களின மருத்துவ குணங்களையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

மேலும், “கிராமங்களைவிட மாநகரங்களில் பாரம்பரிய உணவு, இயற்கை விவசாய உற்பத்தி உணவுப் பொருட்களின் மீது மக்கள் மோகமும், ஆர்வமும் நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள் என்பதை இந்தத் திருவிழாவில் உணர முடிந்தது. தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாரம்பரிய வேளாண் உணவுப் பொருட்கள்தான் கரோனா உட்பட பல்வேறு நோய்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாமருந்தாக உள்ளது.

அந்தவகையில் மண்வாசனை கிராமிய திருவிழாவைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மண்வாசனை அமைப்பையும் ஊக்கப்படுத்த முதலமைச்சர் முன்வரவேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Related Stories

No stories found.