மத்தியத் தொகுப்பில் குறையும் கையிருப்பு: கோதுமை பற்றாக்குறை ஏற்படுமா?

மத்தியத் தொகுப்பில் குறையும் கையிருப்பு: கோதுமை பற்றாக்குறை ஏற்படுமா?

ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி மத்திய தொகுப்பில் கோதுமை கையிருப்பு 311.42 லட்சம் மெட்ரிக் டன்களாக (LMT) உள்ளது. இதனால் நாட்டில் கோதுமை பற்றாக்குறை ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டில் மத்திய தொகுப்பில் கோதுமை கையிருப்பு 241.23 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. அதன்பின்னர் குறைவான கையிருப்பு தற்போது பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி மத்திய தொகுப்பில் கோதுமை இருப்பு 602.91 எல்எம்டியாக இருந்தது.

இந்த ஆண்டு கோதுமை கையிருப்பில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள போதிலும், இது அரசாங்கத்தின் இருப்பு விதிமுறைகளை விட அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளின்படி, ஏப்ரல் 1-ம் தேதியின்படி கோதுமையின் இருப்பு 44.60 எல்எம்டியாக இருக்க வேண்டும், ஜூலை 1-ல் 245.80 எல்எம்டியாகவும், அக்டோபர் 1-ல் 175.20 எல்எம்டி மற்றும் ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 108 எல்எம்டியாக இருக்கவேண்டும். இது தவிர இந்த நான்கு தேதிகளிலும் அவசர கால தேவைகளுக்காக கூடுதலாக 30 எல்எம்டி இருப்புப் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதனால் குறைந்தது கோதுமை கையிருப்பு:

2022-23 ரபி பருவத்தில் குறைந்த அளவில் மட்டுமே கோதுமை கொள்முதல் செய்யப்பட்டதுதான், மத்திய தொகுப்பில் இருப்புச் சரிவு ஏற்பட முக்கியக் காரணம் என்று இந்திய உணவு கழகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி வரை 187.28 எல்எம்டி கோதுமை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கோதுமை கொள்முதலுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு ஆகும். கடந்த ரபி பருவத்தில் 433 எல்எம்டி கோதுமையை அரசு கொள்முதல் செய்து சாதனை படைத்தது.

மத்திய தொகுப்பில் ஏற்பட்ட சரிவு மற்றும் உள்நாட்டில் கோதுமை பற்றாக்குறை அபாயம் ஏற்படும் சூழல் காரணமாக கடந்த மே 13 அன்று, கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டுச் சந்தையில் கோதுமையின் விலையைக் குறைக்கவும், கோதுமை கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா ஆகிய இரண்டு திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோதுமை ஒதுக்கீட்டையும் மத்திய அரசு திருத்தியுள்ளது.

மத்திய தொகுப்பில் கோதுமை இருப்பு குறைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி நிலவரப்படி மத்திய தொகுப்பில் அரிசி கையிருப்பு 496.69 எல்எம்டியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இருந்த 491.50 எல்எம்டியை விட சற்று அதிகமாகும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in