அயோத்தியில் அசைவத்துக்கு அனுமதி உண்டா? காத்திருக்கும் கேஎஃப்சி, டொமினோஸ் உணவகங்கள்
அயோத்தி ராமர் கோயிலை முன்வைத்து, முன்னணி உணவகங்கள் அங்கே கிளைபரப்பத் தொடங்கியுள்ளன. அவற்றில் சர்வதேச உணவகங்களும் அடங்கும் என்பதால், அயோத்தி எல்லைக்குள் அசைவத்துக்கு அனுமதி உண்டா என்ற கேள்வியும் அங்கே எழுந்திருக்கிறது.
ஜனவரி மத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் குடமுழுக்கு விழாவினை அடுத்து, இந்தியாவின் பிரதான ஆன்மிக யாத்திரை தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. இதனையொட்டி அங்கே வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து உணவு மற்றும் தங்கும் விடுதிகள் அதிகரித்துள்ளன. வருகை தருவோரில் சர்வதேச பயணிகள் இடம்பெறுவார்கள் என்பதாலும், அவர்களுக்கான பிரபல சங்கிலித் தொடர் உணவகங்கள் கிளைபரப்பும் என்பதாலும், அயோத்தியில் அசைவத்துக்கு அனுமதி உண்டா என்ற விவாதம் எழுந்தது.
ஆனால் அயோத்தி நகர நிர்வாகம் ராமர் கோயிலைச் சுற்றி 15 கிமீ வரம்புக்குள் அசைவம் மற்றும் மதுவுக்கு அறவே அனுமதி இல்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளது. அயோத்தி பஞ்ச் கோசி மார்க் எனப்படும் இந்த வரம்புக்குள், ராமாயணத்துடன் தொடர்புடைய புனிதத் தலங்கள் நிறைந்திருக்கின்றன. ராமர் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் புனித யாத்திரையில் இந்த தலங்களும் அடங்கும் என்பதால், அங்கே அசைவம் மற்றும் மதுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
எனவே, அமெரிக்காவின் பிரபல கேஎஃப்சி உணவகம் லக்னோ சாலைக்கு விரட்டப்பட்டுள்ளது. அதே வேளையில் சைவம் மட்டுமே பரிமாறுவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டதில், டொமினோஸ் உணவகம் அயோத்தி ராமர் கோயிலில் இருந்து 1 கிமீ எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேஎஃப்சி உணவகமும் சைவம் மட்டுமே பரிமாறுவோம் என்ற நிபந்தனைக்கு உட்பட்டால், அயோத்தி எல்லைக்குள் அனுமதிக்கத் தயார் என அயோத்தி நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி மாநகரை சர்வதேச அளவிலான ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சியில், அங்கே வருகை தருவோருக்கான வசதிகளை மேம்படுத்துவதில் முன்னதாக ரூ.8769 கோடி மதிப்பிலான 161 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் உத்தரபிரதேச உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் போது கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கின்றன.
இவற்றுக்கு அப்பால் மாநில சுற்றுலாத் துறை ரூ.2020 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்க உள்ளது. அதே போன்று வீட்டுவசதித் துறை சார்பில் ரூ.3234 கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே அங்கே தொடங்கியுள்ளன. இதனிடையே, ராம நவமியை குறிவைத்து அடுத்த ஆன்மிக விசேஷத்துக்கு அயோத்தி தயாராகி வருகிறது. மாநில அரசின் கணிப்புகளின் அடிப்படையில் ஏப்ரல் 17, ராம நவமி வரை அயோத்திக்கு வாரந்தோறும் 10 முதல் 12 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்பதிலும் விருந்தோம்பல் வழங்குவதிலும், கடும் கட்டுப்பாடுகளுடன் அயோத்தி காத்திருக்கிறது.
இதையும் வாசிக்கலாமே...
வாக்காளர் பட்டியலில் இருந்து 1.66 கோடி பேர் நீக்கம்... உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்!
சட்லஜ் ஆற்றில் மீட்கப்பட்டது வெற்றி துரைசாமியின் உடல் பாகமா?: டிஎன்ஏ பரிசோதனை!
பாஜகவில் ஐக்கியமாகும் 18 அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்... அண்ணாமலை அவசரமாக இன்று டெல்லி பயணம்!
கூட்டணிக்காக விடாமல் துரத்தும் அதிமுக, பாஜக... குழப்பத்தில் பாமக!
அணையப்போகும் விளக்கு பிரகாசமாகத் தான் எரியும்... அதிமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்!