அதிர்ச்சி... தமிழகத்தில் பத்தில் ஓர் அசைவ உணவகம் படுமோசம்!

அசைவ உணவு
அசைவ உணவு

தமிழ்நாட்டில் செயல்படும் அசைவ உணவகங்களில் குறைந்தது பத்தில் ஒன்றேனும், வீணாகிய மற்றும் சுகாதாரமற்ற அசைவங்களை பரிமாறுவது, உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

சவர்மா உள்ளிட்ட புதிய ரக அசைவ ரகங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகளால், உயிர்ப்பலிகள் அதிகமானதை அடுத்து தமிழகத்தில் அசைவ உணவகங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. சிறிய மற்றும் பெரிய உணவகங்கள் பலவற்றிலும், வீணான மற்றும் சுகாதாரமற்ற அசைவ ரகங்கள் அதிகம் பரிமாறப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவர்மா
சவர்மா

சவர்மா தொடர்பாக தொடங்கிய ஆய்வில் கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அசைவ உணவகங்கள் ஆய்வுக்கு ஆளாயின. இவற்றில் சுமார் 2 ஆயிரம் உணவகங்கள், வீணாகிப்போன உணவுகள் மற்றும் அசைவ ரகங்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

கடந்த ஒன்றரை மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளில், உணவுகளை சமைப்பது மற்றும் பாதுகாப்பதில் அலட்சியம் காட்டியதற்காக ரூ11.98 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளன. மேலும் 5,934 கிலோ சுகாதாரமற்ற மற்றும் அழுகிய அசைவ ரகங்கள் ஆய்வில் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன.

அசைவ ரகங்கள்
அசைவ ரகங்கள்

அசைவ உணவகங்கள் மீதான உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு, அசைவ உணவகங்களுக்கான வழிகாட்டுதல்கள் பலவற்றையும் அதிகாரிகள் வழங்கியுள்ளனர். தேவைக்கு அதிகமாக அசைவ ரகங்களை வாங்குவது மற்றும் சமைப்பதே, அவற்றை கெடாது பாதுகாப்பதில் சவால்களை ஏற்படுத்துவதாகவும், எனவே தேவைக்கு ஏற்ப அவ்வப்போது அசைவ ரகங்களை வாங்குவது மற்றும் சமைப்பதை தொடருமாறும் அறிவுறுத்தி உள்ளார்கள்.

தமிழகமெங்கும் நேற்று(அக்.6) ஒருநாளில் 1055 உணவகங்கள் ஆய்வுக்கு ஆளானதில் அவற்றில் 123 உணவகங்கள் வீணாகிப்போன அசைவ ரகங்களை பரிமாறுவது கண்டறியப்பட்டது. மேலும் இதுவரையிலான ஆய்வுகள் அளித்த தரவுகளின் அடிப்படையில், சுமார் 12% அசைவ உணவகங்கள் தரக்குறைவான உணவுகள் மற்றும் அவற்றுக்கான சேர்மானங்களை பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in