4 லட்சம் ஏக்கரில் பயிர்வாரி முறை: அனுகூலம் தருமா அரசின் உத்தி?

4 லட்சம் ஏக்கரில் பயிர்வாரி முறை: அனுகூலம் தருமா அரசின் உத்தி?

கோதுமை, நெல், கரும்பு ஆகிய தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களையே சாகுபடி செய்யாமல் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்யுங்கள் என்று விவசாயிகளிடம் கோரிக்கை வைத்த மத்திய அரசு, அவர்களுடைய ஒத்துழைப்புடன் நாட்டின் 100 மாவட்டங்களில் இப்போது சிறு தானிய சாகுபடியை உயர்த்தியிருக்கிறது. 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்புள்ள நிலங்களில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது குறித்து சமீபத்தில் நடந்த காணொலிக் கருத்தரங்கில் கலந்துகொண்ட தொழில் – வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இதைத் தெரிவித்திருக்கிறார்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

இது இரண்டு விதங்களில் நாட்டுக்கு நன்மை செய்வதாகும். பெரும்பாலான சிறு தானியங்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்காது என்பதுடன் 90 நாட்களுக்குள்ளேயே சாகுபடியாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவு குறைந்து, வருமானம் அதிகரிக்கும். எண்ணெய் வித்துகள், பருப்பு உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கு ஆகும் செலவு குறையும். இந்தியாவில் இப்போது நீரிழிவு போன்றவை பெருகிவிட்டதால் மக்களிடையே உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் சிறுதானியங்கள், உரம் – பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தாமல் தயாரிக்கப்படும் இயற்கை சாகுபடியில் விளையும் அரிசி, பருப்பு, கீரைகள், காய்கறிகள் போன்ற விளைபொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது அதிகரித்துவருகிறது. எனவே இவற்றுக்கு சந்தை கிடைக்காதோ என்று அஞ்சவும் தேவையில்லை. எல்லோரும் ஒரிரு பயிர்களையே சாகுபடி செய்யும்போது உபரி உற்பத்தியால் ஏற்படும் விலை வீழ்ச்சியும் தடுத்து நிறுத்தப்படும். சிறு தானியங்கள் என்றும் தினை வகைகள் என்றும் அழைக்கப்படும் பாரம்பரிய ரகங்கள் கேழ்வரகு, வரகு, ராகி, சோளம், கம்பு, சாமை, புல்லுச்சாமை (குதிரைவாலி) போன்றவை ஆகும்.

சிறு தானியங்களைப் போலவே அரசு இப்போது எண்ணெய் வித்துகள் சாகுபடிக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. எள், நிலக்கடலை, கடுகு, தேங்காயைப் போல இப்போது பனையெண்ணெய்க்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் எண்ணெய் வித்துகளைப் பயிரிடுவது 50 லட்சம் ஏக்கர்களாக உயர வேண்டும் என்று அரசு விரும்புகிறது. எண்ணெய் வித்துகளை ஊடு பயிராகவும் சாகுபடி செய்ய தேவைப்படும் உதவிகளைச் செய்ய அரசு தயாராகி வருகிறது. எண்ணெய் வித்துகளில் நிலம், தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப இந்தியா முழுவதும் பயிரிட 230 வகையிலான உயர் விளைச்சல் எண்ணெய் வித்து ரகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. சமையல் எண்ணெய் பயன்பாடும் விலையும் அதிகரித்தே வருகிறது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் இறக்குமதியைக் குறைத்து, அரிய அந்நியச் செலாவணியைச் சேமிக்க அரசு விரும்புகிறது.

ஒரு காலத்தில் இந்தியாவின் கிராமப்புறங்களில் சிறு தானியங்களைத்தான் சாப்பிட்டு நோயின்றி உரத்துடன் வாழ்ந்தார்கள். அந்தக் காலம் மீண்டும் திரும்ப சிறு தானிய பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டம் தீட்டி வருகிறது. அதற்கு முன்னோடியாக சாகுபடிப் பரப்பை இலக்கு வைத்து அதிகப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார் பியூஷ் கோயல்.

விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைய வேண்டும், சாகுபடிக்குப் பிறகு சந்தையில் நல்ல விலைக்கு விற்க வேண்டும், உரம் – பூச்சிக்கொல்லிகளுக்கும் தண்ணீருக்கும் செய்யும் செலவைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அரசு ஒருங்கிணைந்த விவசாய சாகுபடி திட்டத்தை வகுத்து வருகிறது. உணவுப் பயிர், வணிகப் பயிருக்குத் தரும் முக்கியத்துவத்தை உடலுக்கு உரத்தைத் தரும் ஊட்டச்சத்துள்ள விளைபொருள்களுக்கும் அளிக்க முடிவு செய்திருக்கிறது. இதற்கு நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்குவிப்புகளை அறிவித்துள்ளது. விவசாயத்துக்குத் தேவைப்படும் அடித்தளக் கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படுகின்றன. சிறு தானியங்களைச் சாகுபடி செய்வதன் மூலம் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்யலாம், ஊட்டச்சத்துள்ள உணவைத் தயாரிக்கலாம், இடுபொருள் செலவைக் குறைத்து விளைச்சலை நல்ல விலைக்கு விற்று விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தலாம் என்று அரசு கருதுகிறது. 9 வித சிறு தானிய உற்பத்தியில் இந்தியா இப்போது சர்வதேச அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதை முதலிடத்துக்கு நகர்த்துவதன் மூலம் ஏற்றுமதி வருமானமும் உயர வாய்ப்புகள் அதிகம் என்று பியூஷ் கோயல் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.