நெற்பயிரைக் காப்பீடு செய்ய கடைசி நாள்: வேளாண் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நெற்பயிரைக் காப்பீடு செய்ய கடைசி நாள்: வேளாண் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சம்பா, தாளடி பருவ நெற்பயிர்களை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

பயிர்க்காப்பீடு தொடர்பாக தமிழ்நாடு உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சம்பா, தாளடி, பிசானப் பருவ நெற்பயிர்களை நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யவேண்டும். பயிர்க்காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மாநில அரசின் காப்பீட்டு கட்டணம் மானியமாக ரூ.2,339 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட விவசாயிகள் டிசம்பர் 15ம் தேதி வரை காப்பீடு செய்யலாம். பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் கூட்டுறவு சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்யலாம். பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள் பொதுசேவை மையங்களில் காப்பீடு செய்துகொள்ளலாம். பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விவசாயிகள் காப்பீடு செய்யவேண்டும். ஒருவேளை வெள்ளத்தால் பயிர்சேதம் அடைந்தபின் காப்பீடு செய்ய இயலாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டுள்ள 24.13 இலட்சம் ஏக்கர் நெற்பயிரில், 5.90 இலட்சம் ஏக்கர், 10.38 இலட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர், ஈரோடு மாவட்டங்களில் சம்பா பருவ நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 15ம் தேதி ஆகும். முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்ற அடங்கல் அல்லது இ-அடங்கல் அல்லது விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்குக் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல்கள் ஆகிய ஆவணங்களைக் கொண்டு பயிர்க்காப்பீடு செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in