விநாடிக்கு 2 பிரியாணி விழுங்கிய இந்தியர்கள்

2022ஆம் ஆண்டின் இன்னொரு சாதனை
விநாடிக்கு 2 பிரியாணி விழுங்கிய இந்தியர்கள்

2022ஆம் ஆண்டில் இந்தியர்கள் 'ஸ்விக்கி' வாயிலாக ஆர்டர் செய்த உணவு ரகங்களில் பிரியாணி முதலிடம் பிடித்திருக்கிறது. நிமிடத்துக்கு 137, அதாவது விநாடிக்கு 2.3 பிரியாணி இந்தியர்களால் இந்த ஆண்டில் விழுங்கப்பட்டிருக்கிறது.

தனியொருவருக்கு பிரியாணி இல்லையேல் இந்த ஜகத்தினை அழித்திட வேண்டும் என்று இந்தியர்கள் குரல் கொடுக்காததுதான் குறைச்சல்! அந்தளவுக்கு இந்திய மக்கள் மத்தியில் பிரியாணி பித்தேறி வருகிறது. 7வது ஆண்டாக தொடரும் ஸ்விக்கி நிறுவனத்தின் வருடாந்திர இந்திய பட்டியலில், இந்த 2022ஆம் ஆண்டும் பிரியாணியே இந்தியர்களால் அதிகம் விரும்பப்பட்ட உணவாக பெயர் பெற்றிருக்கிறது.

பிரியாணி ரகங்களிலும் சிக்கன் பிரியாணியே முதலிடம் பிடித்திருக்கிறது. பிரியாணிக்கு அப்பாலும் சிக்கன் மேல் இந்தியர்கள் ஈடுபாடு கொண்டிருக்கிறார்கள். விதவிதமான சிக்கன் ரகங்கள் சுமார் 30 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.

பிரியாணிக்கு அடுத்த இடத்த இந்தியர்களின் மையல் மசாலா தோசையில் மையங்கொண்டிருக்கிறது. நொறுக்கு வகைகளில் சமோசாவுக்கு இந்தியர்கள் அதிகம் சப்புக்கொட்டி இருக்கிறார்கள். இந்த ஓராண்டில் மட்டும் 40 லட்சம் முறை சமோசா ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது.

அதிகப்படியான ஆர்டர்கள் பெங்களூரு நகரிலேயே பதிவாகி இருக்கின்றன. அவர்களில் ஒரு அகோரப் பசியாளர், தீபாவளி தினத்துக்காக சுமார் ரூ75 ஆயிரத்துக்கு உணவு ரகங்களை ஆர்டர் செய்திருக்கிறார். ஒருவர் சாப்பிட்டாரா அல்லது ஊருக்கே பரிமாறினாரா என்ற விபரம் கிடைக்கப்பெறவில்லை.

இந்தியாவில் செயல்படும் உணவு விநியோக நிறுவனங்களில் ஸ்விக்கி என்னும் ஒரு நிறுவனத்தின் பட்டியல் மட்டுமே இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in