தமிழகத்தில் எகிறியது உரம் விலை: விவசாயிகள் வேதனை

மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டு
தமிழகத்தில் எகிறியது உரம் விலை: விவசாயிகள் வேதனை

மத்திய அரசு உரமானியத்தை குறைத்ததால் தமிழகத்தில் உரவிலை கடுமையாக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. நெல், கரும்பு, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் அதிகம் பயிர் செய்யப்படுகின்றன. இவற்றின் மகசூலை அதிகரிக்கவும், பயிரின் வளர்ச்சிக்காகவும் டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். வேளாண் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கடைகளிலும், கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் உரங்களை வாங்கி உபயோகிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தற்போது உரவிலை அதிகமாக உயர்ந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். டிஏபி சப்ளை முற்றிலும் இல்லாததால் காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு காரணமாக கூட்டுறவு சங்கங்களில் உரத்திற்கு அலைய வேண்டிய நிலை ஏறபட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட 45 கிலோ உர மூட்டை 310 ரூபாயிலிருந்து இரட்டிப்பு விலைக்கு விற்கப்படுகிறது. இவ்வளவு விலையா என கேள்வி கேட்டால், உரம் இல்லை என்கிறார்கள் என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்ன என தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகத்திடம் கேட்டோம். ' தமிழகத்தில் உரத்தட்டுப்பாட்டிற்கு மத்திய அரசு தான் முழு காரணம். கடந்த 2021-2022ல் உரமானியமாக 1.34 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. 2022-2023ல் அந்த மானியத்தை 79,530 கோடியாக குறைத்துவிட்டது. ஏற்கெனவே இந்தியாவில் தேவைக்கு ஏற்ப உர உற்பத்தி இல்லை. 60 சதவீத உரத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம். மானியம் குறைப்பு செய்ததால் கடுமையான உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது' என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், '2023க்குள் விவசாயிகளின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால், அதற்கு நேர் எதிராக உரமானியத்தைக்கு குறைந்து கோடிக்கணக்கான விவசாயிகள் அத்தொழிலை விட்டு வெளியேற வழி செய்துள்ளார்' என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in