குவிந்த விவசாயிகள்
குவிந்த விவசாயிகள்

மதகில் குவிந்த விவசாயிகள்: தடுத்து நிறுத்தியது போலீஸ்

வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதை எதிர்த்து பச்சைத் துண்டு பேரணி நடத்த பார்த்திபனூர் மதகில் குவிந்த விவசாயிகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மழவராயனேந்தல், சம்பராயனேந்தல், முத்தனேந்தல் ஆகிய இடங்களில் ஏப்ரல் முதல் வாரத்தில் அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதனை எதிர்த்து காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பும், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து பச்சைத்துண்டு பேரணி நடத்த இன்று முடிவு செய்திருந்தனர்.

காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை.
காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை.

இதற்காக விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் நிர்வாகிகள் இருநூறுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களுடன் மானாமதுரை அருகே உள்ள வேதியரேந்தல் பார்த்திபனூர் மதகு அணைக்கு வந்தனர். ஆனால், இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால், திட்டமிட்டபடி பேரணி நடத்த விவசாயிகள் அணைப் பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அன்பு, மானாமதுரை உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமாணிக்கம், மானாமதுரை காவல் ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் உள்பட ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.அர்ச்சுணன், மாநிலத் தலைவர் மாரிமுத்து, மாநிலச் செயலாளர் இரா.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைப்பதை கைவிட மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்துவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அதை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், " காவல்துறையினரின் பேச்சுவார்த்தையால் பச்சைத்துண்டுப் பேரணியை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். இதனையும் மீறி மணல் குவாரிகள் அமைத்தால் போராட்டத்தை நடத்துவோம் " என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in