தடைகளை மீறி டெல்லியை நோக்கி டிராக்டர்களில் புறப்பட்ட விவசாயிகள்: 50,000 போலீஸார் குவிப்பு!

டெல்லியை நோக்கி டிராக்டர்களில் செல்லும் விவசாயிகள்
டெல்லியை நோக்கி டிராக்டர்களில் செல்லும் விவசாயிகள்

ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து தடைகளை மீறி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, லக்கிம்பூர் கேரி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஹரியாணா, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக இந்த மாநிலங்களிலிருந்து ஏராளமான டிராக்டர்களில் இன்று காலை முதல் தலைநகர் டெல்லியை நோக்கி விவசாயிகள் சென்று கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க டெல்லியில் உள்ள சிங், திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாலா அருகே உள்ள ஷம்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்
அம்பாலா அருகே உள்ள ஷம்பு பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்

சிமென்ட் தடுப்புகள், சுருள் கம்பி தடுப்பு, பேரி கார்டுகள் என பல்வேறு தடுப்புகளைச் சாலையில் வைத்து போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெல்லி - உத்தரப்பிரதேச எல்லையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாலா, குருஷேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத் மற்றும் சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் இணையம் மற்றும் குரூப் எஸ்எம்எஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் காரணமாக போலீஸ் குவிப்பு மற்றும் ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் டெல்லி - குருகிராம் எல்லையில் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in