தொடர்ந்து முழு கொள்ளளவில் மேட்டூர் அணை

தொடர்ந்து முழு கொள்ளளவில் மேட்டூர் அணை

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் தொடர்ந்து நீடித்து வருவது விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த ஆண்டு தொடக்கம் முதலே  கர்நாடகாவில்  கனமழை பெய்ததன் காரணமாக  மேட்டூர் அணை, கடந்த ஜூலை  மாதத்திலேயே தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வந்த ஒரு லட்சம் கன அடிக்கும் மேலான உபரி நீர் முழுவதும் கடலுக்கு அனுப்பப்பட்டது. பாசனத்திற்காக முன்கூட்டியே  மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் பின்னர் கர்நாடகத்தில் திரும்பவும் அதிக கன மழை பெய்ததால்  இரண்டாவது முறையாகவும் மேட்டூர் அணை நிரம்பியது.  அப்போதும் அதிக அளவு உபரி நீர் கடலுக்கு அனுப்பப்பட்டது. 

இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வந்தது.  தொடர்ந்து பாசனத்திற்கு நீர்  திறக்கப்பட்டு வந்ததால் கடந்த மாதம் மத்தியில் அணையின் நீர்மட்டம்  118 அடிககும் கீழாக  குறைந்தது. ஆனால் மாத இறுதியில் மீண்டும் அணைக்கு நீர்வரத்து உயர்ந்ததால் இந்த மாத தொடக்கத்தில் அணை மீண்டும் மூன்றாவது முறையாக 120 அடியை எட்டியது.

அதனால் அணைக்கு வரும் மொத்த நீரும் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,600 கன அடியாக நீடித்து வருகிறது. அதனால்  சுரங்க மற்றும் அனல் மின் நிலையம் வழியாக பத்தாயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் தொடர்ந்து 120 அடி நீர் மட்டம் நிலைத்திருப்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த பருவத்துக்கான சாகுபடி குறித்து டெல்டா விவசாயிகள் யோசித்து வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in