மத்திய அரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள்...'டெல்லி சலோ' மீண்டும் நாளை தொடங்குகிறது!

விவசாயிகள் நெடும் பயணம்
விவசாயிகள் நெடும் பயணம்
Updated on
2 min read

பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு முன்வைத்த  யோசனையை நிராகரிப்பதாக கூறியுள்ள விவசாயிகள் சங்கத்தினர், டெல்லி நோக்கிய தங்கள் நெடும்பயணத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அத்துடன் அதற்கான முன்னேற்பாடுகளுடன் டெல்லி நோக்கி முன்னேறினர்.

அவர்களை டெல்லி எல்லைக்குள் நுழைய விடாதபடிக்கு துணை ராணுவம் மற்றும் போலீஸார் தடுப்புகளை ஏற்படுத்தி மறித்து வைத்துள்ளனர். குறிப்பாக ஹரியாணா, பஞ்சாப் எல்லை முற்றிலுமாக முடங்கிப் போய் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடாரங்கள் அமைத்து தங்கியுள்ளனர். இதையடுத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்தது.

போராடும் விவசாயிகள்
போராடும் விவசாயிகள்

விவசாயிகள் சங்கத்தினர், மத்திய அரசுடன் கடந்த 8 மற்றும் 12-ம் தேதிகளில் நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படவில்லை. இதனால் 15-ம் தேதி இரவு 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜூன் முண்டா, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் ஆகியோர் பங்கேற்றனர். பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், பஞ்சாப் நிதியமைச்சர் ஹர்பல் சிங் சீமா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பிடத் தகுந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.

அதையடுத்து நேற்று முன் தினம்  இரவு மத்திய அமைச்சர்கள் குழுவினர் சண்டிகரில்  நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மத்திய அரசின் சார்பில் விவசாயிகளுக்கான  திட்ட வரைவு முன்வைக்கப்பட்டது. அதன்படி  விவசாயிகள் ஒப்புக்கொண்டால் ஐந்து ஆண்டுகளுக்கு  விளை பொருட்களை ஆதார விலையில் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. 

மத்திய அமைச்சர்கள் பேச்சு
மத்திய அமைச்சர்கள் பேச்சு

இதையடுத்து மத்திய அரசு சார்பில் முன்மொழிந்த யோசனை பற்றி பரிசீலனைக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குள்   தங்களது முடிவுகளை தெரிவிப்பதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர். இரண்டு நாட்களில் சுமூக தீர்வு கிடைக்கும் என நம்புவதாகவும் அவர்கள்  தெரிவித்திருந்தனர். டெல்லி நோக்கி முன்னேறும் தங்கள் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் அவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து பரிசீலித்த விவசாயிகள் மத்திய அரசின் யோசனையை தாங்கள் நிராகரித்துள்ளதாக அறிவித்துள்ளனர். ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படுவது தங்களுக்கு ஏற்புடையது இல்லை, அந்தத் திட்டத்தில் தெளிவு இல்லை என்றும் கூறியுள்ள விவசாயிகள் சங்கத்தினர் டெல்லி நோக்கி தங்கள்  பயணத்தைத் தொடர்ந்து  மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  டெல்லியை முற்றுகையிடும் விவசாயிகளின் நெடும் பயணம் நாளை மீண்டும் தொடங்குகிறது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in