பிரதமரிடம் ஏன் முறையிடவில்லை?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க கோரும் பி.ஆர்.பாண்டியன்

பிரதமரிடம் ஏன் முறையிடவில்லை?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க கோரும் பி.ஆர்.பாண்டியன்

உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகேதாட்டு அணை வரைவுத்திட்ட அறிக்கை குறித்து விவாதிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ``கர்நாடக அரசு சட்டவிரோதமாக மேகேதாட்டு அணையை கட்டி காவிரியில் தமிழகம் நோக்கி வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து, தமிழகத்தை பாலைவனமாக்கும் மறைமுக சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடகாவிற்கு மோடி அரசு துணை போகிறது.

மேகேதாட்டு அணையை கட்டி தமிழகத்தை அழிக்க வேண்டும் என்கிற ஒரே அரசியல் பார்வையோடு ஆட்சியைப் பிடிப்பதற்காக கன்னட காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. தமிழகத்தில் திமுகவோடு கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்பேற்று இருக்கிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால், காத்திருந்து போராடி பெற்ற காவிரி உரிமை பறிபோய் விடுமோ? என்கிற அச்சம் தமிழ்நாட்டில் விவசாயிகளிடத்தில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மே 25-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய தலைவர், தமிழக அரசுக்கு மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கையை ஜூன் 17-ம் தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உள்ளோம். இதுகுறித்து மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை பெற்றுள்ளோம் என்கிற தகவலை கடிதம் மூலம் அனுப்பி உள்ளார்.

அதற்குப்பிறகு மே 27-ம் தேதி பிரதமரும் முதல்வரும் ஒரே கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 29-ம் தேதி இந்திய குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 4-ம் தேதி இந்து ஆங்கில பத்திரிகையில் இச்செய்தி வெளியான பிறகுதான் தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தின் கடிதம் குறித்த தகவலை வெளியிடுகிறது.

இந் நடவடிக்கையில் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரும் அச்சமும் சந்தேகமும் எழுந்துள்ளது. ஏன் மே 25 முதல் ஜூன் 4-ம் தேதி வரையிலும் ஆணைய தலைவரின் கடிதம் குறித்து தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க முன்வரவில்லை. பிரதமரிடம் ஏன் முறையிடவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் பெரும்பான்மை அடிப்படையில் தான் முடிவெடுக்க முடியும். இந்நிலையில் கேரளா ஏற்கெனவே மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது கேரள அரசின் ஆதரவோடு பெரும்பான்மை மாநிலங்கள் ஒன்றுகூடி வரைவு திட்ட அறிக்கையை நிராகரிப்பதற்கு முன்வரவேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டு அணை வரைவுத்திட்ட அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இத்திட்டம் குறித்து விவாதிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஜூன் 16-ம் தேதி காலை 11 மணிக்கு டெல்லி ஆர்.கே புரத்தில் உள்ள காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் முன் மாபெரும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in