குமரியில் இளைஞர்களையும் ஈர்க்கும் தென்னை தொழில்!

கரோனா காலத்திலும் கைகொடுத்த கற்பகத்தரு
குமரியில் இளைஞர்களையும் ஈர்க்கும் தென்னை தொழில்!
தேசிகாமணி

தினமும் 6 மணி நேரம் வேலை... மாதம் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்!

தமிழகத்தில் தென்னை விவசாயம் அதிகம் உள்ள மாவட்டங்களில் கன்னியாகுமரி முதலிடத்தை பெற்றுள்ளது. பணப்பயிரான தென்னை 35 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் இங்கு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தேங்காய்களில் எண்ணெய்ச்சத்து அதிகம் என்பதால், இவற்றிலிருந்து தரமான தேங்காய் எண்ணெய் அதிக அளவில் கிடைப்பதாலும், சமையலுக்கு கூடுதல் சுவை தருவதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் குமரி மாவட்ட தேங்காய்க்கு நல்ல மவுசு உள்ளது.

பனை மரம் போன்றே தென்னையில் அனைத்து பொருட்களுமே பணமாக்கப்படுகிறது. இளநீர், தேங்காய், ஓலை ஈர்க்கு, கயிறுக்கு மூலப்பொருளான கதம்பை, விறகுக்கான மட்டைகள், கொதும்பு என அனைத்துமே விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி கொடுக்கிறது.

பொதுவாக பனை மற்றும் தென்னை மரம் ஏறும் தொழிலாளி, தேங்காய் வெட்டும் தொழிலாளிகளுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை ஏறும் தொழிலாளிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு தேங்காய் வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் தென்னையை விட்டு மாற்று பயிர்களுக்கு விவசாயிகள் மாறிவந்தனர்.

இதற்கு மத்தியில் கேரளாவில் இயந்திரங்கள் மூலம் தென்னை மரம் ஏறி தேங்காய் வெட்டும் தொழிலில் பெண்களே ஈடுபட்டு வந்ததை தமிழக வேளாண் துறையினர் பார்த்து ஆச்சரியமடைந்தனர். அதன் விளைவாக, கேரள எல்லையை ஒட்டிய தமிழக பகுதியான குமரி, தென்காசி, கோவை, தேனி போன்ற பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் தென்னை ஏறும் தொழில் பரவியது. தொடக்கத்தில் சொற்பமான தொழிலாளர்களே இயந்திரத்தின் மூலம் தென்னை மரம் ஏறிவந்தனர்.

இந்த நிலையில் இயந்திரம் மூலம் தேங்காய் பறிக்கும் பாதுகாப்பான தொழில் நுட்பம் இளைஞர்களை ஈர்த்தது. இடுப்பில் பெல்ட் பிடிமானம், தென்னையில் கம்பிகள் கோர்வையுடன் நடந்த செல்வது போன்று ஆபத்து இன்றி தேங்காய் பறிக்கும் நுட்பம் போன்றவை வேலையின்றி தவித்த பட்டதாரி இளைஞர்கள் பலரையும் இத்தொழிலில் ஈடுபட செய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் தேங்காய் வெட்டும் தொழிலால் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். கட்டைமரம், நெட்டைமரம் என எந்த மரமானாலும் சராசரியாக மரம் ஒன்றிற்கு ரூ.25 முதல் ரூ.30 வரை கூலி பெறுகின்றனர். காலை 6 மணிக்கு களத்தில் இறங்கும் இவர்கள் 12 மணிக்குள் வேலையை முடித்து விடுகின்றனர்.

ஒவ்வொருவரும் 60 முதல் 100 தென்னை மரங்களுக்கு மேல் ஏறி தேங்காய் வெட்டுகின்றனர். இதன் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் சம்பாதிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு தென்னை தொழிலாளர்களுக்கும் இப்போது தாராளமாக பெண் கொடுக்க முன்வருகிறார்கள் குமரி மாவட்டத்து மக்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய கொல்லாமாவடியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி தேசிகாமணி, “நான் டிப்ளமோ படிச்சுட்டு பல இடங்கள்ல வேலை பார்த்தும் போதிய வருமானம் கிடைக்கல. இதைப் போல பல வியாபாரங்களும் செய்து பார்த்தேன் போதிய வருமானம் கிடைக்கல. அதனால், கவுரவம் பார்க்காம வேளாண்துறையில் இயந்திரம் மூலம் தென்னை மரம் ஏற பயிற்சி எடுத்தேன். கடந்த 10 வருசமா மரம் ஏறி தேங்காய் வெட்டுறேன். இந்த வருமானத்தை வெச்சுத்தான் என்னோட மூணு பிள்ளைகளையும் படிக்க வைக்கிறேன். குடும்பத் தேவைகளையும் சமாளிக்க முடியுது. இயந்திரம் மூலமா தென்னை ஏறுவது பாதுகாப்பான தொழில் என்பதால இப்ப என்னைப் போல படிச்சவங்க நிறையப் பேரு இந்தத் தொழிலுக்கு வந்துட்டு இருக்காங்க. கரோனா காலத்துல வேலையைத் தொலைச்ச பலபேருக்கும் இப்ப இந்தத் தொழில் தான் கைகுடுக்குது” என்றார்.

தேவதாஸ்
தேவதாஸ்

குருந்தன்கோடு தென்னை உற்பத்தியாளர் சங்க செயலாளர் தேவதாஸ் நம்மிடம் பேசும்போது, “இயந்திரம் மூலம் தென்னை மரம் ஏறும் தொழிலால் குமரி மாவட்டத்தில் பல ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். நல்ல வருவாய் உள்ள தொழில். தென்னை விவசாயிகள், தென்னை தொழிலாளர்களை தேடிச்சென்று வேலைக்கு அழைத்து மரியாதையுடன் நடத்தி வருகின்றனர். தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு அரசு மானியம், மற்றும் சலுகைகளை வழங்கினால் இன்னும் பலருக்கு வாழ்வாதாரம் செழிக்கும்” என்றார்.

Related Stories

No stories found.