மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மீண்டும் உயர்கிறது மேட்டூர் நீர்வரத்து: வெள்ள அபாயத்தில் கரையோர மக்கள்!

கடந்த ஓரிரு நாட்களாக குறைந்திருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் திரும்பவும் காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இந்த முறை கர்நாடகத்தை தலைகீழாக புரட்டிப்போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெய்துவரும் கனமழையால் மாநிலம் முழுவதும் இயல்புநிலை பாதிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு பெய்யும் மழையின் நீர் முழுவதும் காவிரியில் வெள்ளமாக பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே கடந்த நாற்பது நாட்களில் இதுவரை மூன்று முறை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீண்டும் நான்காவது முறையாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த வார தொடக்கத்தில் ஒரு லட்சம் கன அடியைத் தாண்டி தமிழகத்திற்கு காவிரியில் நீர்வரத்து இருந்த நிலையில் அது படிப்படியாக உயர்ந்து இரண்டு லட்சத்து 12 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. அதன் விளைவாக காவிரி மற்றும் கொள்ளிடத்தில் பெரிய அளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இந்த இரண்டு ஆற்றின் கரையோரங்களிலும் உள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டன. விவசாயம் வீணாகியது.

பின்னர் அந்த நீர்வரத்து படிப்படியாக குறைந்து சில நாட்களாக 50 ஆயிரம் கன அடியாக இருந்துவந்தது. அதனால் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளம் குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளுக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரியில் திறக்கப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று மாலை 65 ஆயிரம் கன அடியாக இருந்த மேட்டூர் நீர்வரத்து இன்று காலை 80 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவில் தொடர்ந்து நீடிப்பதால் மேட்டூருக்கு வரும் 80 ஆயிரம் கன அடி நீரும் அப்படியே காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக குறைந்திருந்த காவிரி வெள்ளம் தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நீர் அப்படியே கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட உள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மீண்டும் பாதிப்பு தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in