விவசாயி கண்டுபிடித்த ஊதா நெல் ரகம்

தற்செயலாக நிகழ்ந்த வேளாண் அதிசயம்
மதுரை வேளாண் கல்லூரியில் சின்னார் நெல் ரகம்
மதுரை வேளாண் கல்லூரியில் சின்னார் நெல் ரகம்படம்: கே.கே.மகேஷ்

பச்சைப் பசேல் என்று இருப்பதுதான் நெற்பயிரின் குணம். நிறம் மாறினால் சத்துக் குறைபாடு, நோய்த் தாக்குதல், பூச்சிக்கடி என்று உரமும், மருந்தும் தெளிக்கச் சொல்வார்கள் வேளாண் அலுவலர்கள். ஆனால், மதுரை வேளாண் கல்லூரியில் ஒரு வயல் முழுக்க ஊதா கலரில் நெற்பயிர்கள் நிற்கின்றன.

”அய்யோ என்னாச்சு?” என்று விசாரித்தால், “சார் இது ஒரு நெல் ரகம்” என்கிறார்கள் வேளாண் கல்லூரிப் பேராசிரியர்கள். “உங்களது புதிய கண்டுபிடிப்பா?” என்று கேட்டால், ”இதைக் கண்டுபிடித்தது ஒரு விவசாயி. அதை மேலும் ஆராய்வதற்காகவும், அதனுடன் மற்றொரு நெல் ரகத்தைச் சேர்த்து புதிய நெல் ரகத்தை உருவாக்குவதற்காகவுமே நாங்கள் இங்கே பயிர் செய்திருக்கிறோம்” என்றார்கள் வேளாண் அலுவலர்கள்.

”என்னது நெல் ரகத்தைக் கண்டுபிடித்தது ஒரு விவசாயியா? அந்தக் கதையைக் கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றோம்.

மதுரை வேளாண் கல்லூரியில் பயிரிட்டுள்ள சின்னார் நெல் ரகம்
மதுரை வேளாண் கல்லூரியில் பயிரிட்டுள்ள சின்னார் நெல் ரகம்படம்: கே.கே.மகேஷ்

”வறண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழமானாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பம். அவர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அரசு மையத்தில் ‘ஆடுதுறை 36’ (எடிடி 36) என்ற ரக நெல் விதையை வாங்கி, தனது வயலில் விதைத்தார். நெல் முளைத்துப் பயிரானதும், களை எடுக்கப்போனார். அப்போது அதில் ஒரே ஒரு பயிர் மட்டும் கத்தரிப்பூ (ஊதா) கலரில் இருந்தது. களைச்செடி என்று நினைத்து அவர் பிடுங்க முயன்றபோது, அதில் நெற்பயிரைப் போன்றே கதிரும் இருப்பதைப் பார்த்தார். இதைக் கண்டு ஆச்சரியப்பட்ட பக்கத்து வயல்காரரான விவசாயி சின்னார், ’அதைப் பிடுங்கிப் போட்டுறாதீங்க. நான் எடுத்துக்கொண்டுபோய் என்னுடைய வயலில் வளர்த்துக்கொள்கிறேன்’ என்று எடுத்துச் சென்றுவிட்டார். அதன்படி தன்னுடைய வயலில் நட்டுப் பராமரித்தார்.

ஆரம்பத்தில் கத்தரிப்பூ கலரில் வளர்ந்த பயிர், வளர வளர ரோஜா நிறத்துக்கு மாறியது. மற்ற ரகத்தைவிட, இந்த நெல்லின் மணிகள் சற்று நீளமாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தன. இதன் மணிகளைத் தனியாக அறுவடை செய்து பாதுகாத்த அவர், அடுத்த பட்டத்தில் தனிப் பாத்தியில் விதைத்தார். இப்படி தனியாகப் பிரித்து வளர்த்த நெல்லுக்குத் தன்னுடைய பெயரையே சூட்டினார் சின்னார். அதுதான் ‘சின்னார் 20’ என்ற பெயர் பெற்ற இந்த நெல் ரகம். இதில், 20 என்பது 2000/2004 வருடத்தைக் குறிக்கும். இந்த நெல் ரகத்தைக் கீழமானாங்கரையைச் சேர்ந்த புஷ்பம் உள்ளிட்ட மற்ற விவசாயிகளும் ஆர்வத்துடன் பயிரிட்டு, பலன் கண்டதைத் தொடர்ந்து, வேளாண் துறையும் இதைத் தனி ரகமாக ஏற்றது.

இந்த நெற் பயிரானது, சுமார் 88 செ.மீ உயரம் வளரக்கூடியது. கதிரின் நீளம் 22 செ.மீ வரை இருக்கும். சூரு கதிரில் 85 முதல் 100 நெல் இருக்கும். 115 நாட்களில் அறுவடைக்கு வரும் பயிர் இது. இந்த நெல் ரகம் சாயாது என்பதால், விளைச்சலின்போது அதிகக் காற்றோ, மழையோ இருந்தாலும் அதிகச் சேதமிருக்காது. ஏக்கருக்கு 40 முதல் 44 மூடைகள் கிடைக்கும் என்பதால், முதுகுளத்தூர் பகுதி விவசாயிகள் ஆர்வமுடன் விதைக்கிறார்கள்.

இதில், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தன்மை குறைவு என்று விவசாயிகள் சொல்வது குறித்தும் நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம்” என்றனர் வேளாண் அலுவலர்கள்.

”அந்த விவசாயியின் தொடர்பு எண் கிடைக்குமா?” என்று கேட்டபோது, ”சின்னார் சில ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டார்” என்றார்கள். அவர் மறைந்தாலும் அவரது பெயர் இந்த நெல் உள்ளவரை இருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in