சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்!

நாடு சுதந்திரம் அடைந்தபிறகு முதன்முறையாக மேட்டூர் அணை மே மாதத்தில் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே 1925-ம் ஆண்டு தொடங்கி 1934-ம் ஆண்டு மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. டெல்டா பகுதி சாகுபடிக்காக இந்த அணையிலிருந்து ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதுவும் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால்தான் தண்ணீர் திறக்கப்படும். இல்லையெனில் ஜூன் 12க்கு பிறகுதான் திறக்கப்படும். அணைகட்டி முடிக்கப்பட்ட 88 ஆண்டுகளில் இதுவரை 18 முறை மட்டுமே, குறிப்பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் 12க்கு முன்பாகவே அதுவும் மே மாதத்தில் திறக்கப்படுவது புதிய வரலாறாக இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 1947-ம் ஆண்டில் மட்டுமே மே மாதத்தில் அணை திறக்கப்பட்டது. இந்தவகையில் சுதந்திரத்திற்கு பிறகு தற்போதுதான் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலாகவே தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக, கர்நாடகா மாநிலத்திலும், ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழையால், அணைக்கு வரும் நீரின் அளவு உயர்ந்தது. அதனால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்தது.

அதனையடுத்து இன்று காலை மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டது. நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அதிகாரிகள் சகிதமாக மேட்டூர் அணைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் பொத்தானை அமுக்கி மேட்டூர் அணையின் மதகுகளை திறந்து வைத்தார். மதகுகள் வழியாக பாய்ந்தோடிய நீருக்கு மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.

குறிப்பிட்ட நாளுக்கு முன்னதாகவே குறுவை பாசனத்திற்காக பாய்ந்தோடி வரும் தண்ணீரை உற்சாகத்தோடு வரவேற்க குதூகலத்துடன் காத்திருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 10,508 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு குறைவாக உள்ளதால், அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர் இருப்பு 89.94 டி.எம்.சி-யாக உள்ளது. குறுவை பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 5.21 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை சாகுபடிக்கு 125.68 டி.எம்.சி. நீர் தேவைப்படுகிறது. குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணை அணையிலிருந்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும் போது அணை மின் நிலையத்தில் இருந்து 50 மெகா வாட், சுரங்க மின் நிலையங்களில் 200 மெகாவாட், 7 கதவணைகளில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in