தேனீக்களை விரட்டும் விநோத நோய்கள்? விமோசனம் தேடும் தேன் விவசாயிகள்!

தேனீக்களை விரட்டும் விநோத நோய்கள்?
விமோசனம் தேடும் தேன் விவசாயிகள்!

ரம்யமான இயற்கை சூழல் கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில், தேனீ வளர்ப்பும் பிரதானமாக இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 1 லட்சம் கிலோவுக்கு மேல் தேன் சேமிக்கப்படுகிறது. ஆனால், தொடர் நோய் தாக்குதல்களால் நாளுக்குநாள் தேன் மகசூலும் இங்கே கேள்விக்குறியாகி வருகிறது.

தேனீ வளர்ப்பில் நிபுணத்துவம் பெற்ற குமரி மாவட்டத் தொழிலாளர்கள், இங்கிருந்து கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் என பல மாநிலங்களுக்கும் சென்று தேன் பெட்டி வைத்து அதிக அளவில் இயற்கை தேனை உற்பத்தி செய்கின்றனர். இந்திய ராணுவத்துக்கு தேவையான தேன் மார்த்தாண்டத்தில் இருந்தே கொள்முதல் செய்யப்படுகிறது.

எனினும், கடந்த சில ஆண்டுகளாக விநோத நோய்களால் தேனீக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது, விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவித வைரஸ் பாதிப்பால் தேனீக்கள் இனப்பெருக்க காலத்தில் செத்து மடிந்தன. 2 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த பாதிப்பு இருந்தது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து இதற்கு தீர்வு கண்ட பின்னர், மீண்டும் தேன் உற்பத்தி அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த 6 மாத காலமாக தேனீக்கள் கூட்டுப் புழு பருவத்திலேயே இறந்து வருவதால், மீண்டும் தேன் உற்பத்தி பாதித்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குலசேகரத்தை சேர்ந்த முன்னோடி தேன் விவசாயியும் இந்திய தேனீ வாரிய உறுப்பினருமான பி.ஹென்ரி, “கடந்த 30 வருடங்களாகவே தேனீக்கள் விதவிதமான நோய்களுக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நோய்களுக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

ஹென்ரி
ஹென்ரி

பேச்சிப்பாறையில் உள்ள தேனீ மகத்துவ மையம் பெயரளவுக்கே செயல்பட்டு வருகிறது. இதை தேனீ ஆராய்ச்சி மையமாக மாற்றவேண்டும் என, 50 ஆண்டுகளாக தேனீ விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். தேன் ஆராய்ச்சி மையம் அமைந்தால் மட்டுமே, குமரி மாவட்டத்தில் தேன் விவசாயம் காப்பாற்றப்படும். இல்லையேல் இன்னும் கொஞ்சம் கொஞ்சமான குமரி மாவட்டத்தில் தேன் விவசாயம் அழிந்துவிடும்.

தேனீக்களுக்கு விநோத நோய்கள் ஏற்பட்டு தேன் உற்பத்தி பாதிக்கப்படுவதால் பலர் இந்தத் தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குப் போய்விட்டார்கள். தேர்தல் நேரத்தில் அனைத்து வேட்பாளர்களும் பேச்சிப்பாறை தேனீ ஆராய்ச்சி மையம் குறித்த வாக்குறுதியை அளிக்க மறந்ததில்லை. ஆனால் தேர்தல் முடிந்ததும் அதை மறந்துவிடுகிறார்கள். மார்த்தாண்டம் தேனுக்கு புவிசார் குறியீடுபெற வேண்டும் என்ற எங்களது கோரிக்கையும் கேட்பாரின்றி கிடக்கிறது.

தேனீக்களால் தேன் விவசாயம் மட்டுமல்ல மற்ற விவசாயமும் செழிக்கிறது. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை அதிக அளவில் நடப்பதால்தான் இந்தப் பகுதியில் தென்னை, வாழை உள்ளிட்டவையின் மகசூல் அதிகரிக்கிறது. பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல், மோதிரமலை என குமரி மலை கிராமங்களில் மலைத்தேன் அதிக அளவில் கிடைக்கிறது. இதையும் முறைப்படுத்தி பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு உரிய திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

என்னதான் குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தி அதிமாக இருந்தாலும் தேன் கொள்முதலுக்கு முறையான வழிமுறைகள் இல்லை. அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்வது போன்று, தேனையும் கொள்முதல் செய்யவேண்டும். காதிவாரியம் கொள்முதல் செய்யும் தேனுக்கான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். தற்போது ஒரு கிலோ தேன் 130 ரூபாய்க்கும் கீழேதான் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதை குறைந்தபட்சம் 170 ரூபாய் அளவுக்காவது உயர்த்தினால் தான் இந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு கொஞ்சமாவது பிரயோஜனமாக இருக்கும். அதேபோல், மறைமுகமாக மற்ற விவசாயத்தையும் தழைத்தோங்கச் செய்யும் தேனீக்களை மேலும் அதிகரிக்கச் செய்ய மத்திய - மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

தேனீக்களுக்கு ஏற்படும் விநோத நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜானிடம் கேட்டபோது, “முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருவித வைரஸ்களால் தேனீக்கள் இறந்தன. இவற்றை தோட்டக்கலைத் துறை மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து சரிசெய்தனர். அதன் பின்னர் தேன் உற்பத்தி மீண்டும் அதிகரித்தது. விளைபொருட்களின் மகசூல் கூடுவதற்கு தேனீயும் முக்கிய காரணம் என்பதால் தேன் விவசாயத்தை ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போது தேனீக்கள் லார்வா பருவத்திலேயே இறந்து வருவது தொடர்பாகவும் நிபுணர்கள் ஆய்வுசெய்து வருகிறார்கள். விரைவில் இதற்கும் நல்ல தீர்வு எட்டப்படும்” என்றார்.

Related Stories

No stories found.