பசித்துச் சாப்பிடுகிறேன்... களைத்துத் தூங்குகிறேன்!

வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு வந்து விவசாயம் பார்க்கும் ஓம் பிரகாஷ்
ஓம் பிரகாஷ்
ஓம் பிரகாஷ்

லட்ச ரூபாய்க்கும் மேலாக மாதச் சம்பளம், சொகுசான வெளிநாட்டு வாழ்க்கை அத்தனையையும் உதறித்தள்ளிவிட்டு இயற்கை விவசாயம், நாட்டு மாடு வளர்ப்பு என அசத்திவருகிறார் 31 வயது இளைஞரான ஓம் பிரகாஷ்.

ஓம்பிரகாஷின் தோட்டம்...
ஓம்பிரகாஷின் தோட்டம்...

அம்பாசமுத்திரம் அருகில் உள்ள வி.கே.புரத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி. அரபு நாடுகளில் வேலை பார்த்தவர் அதில் ஈட்டிய வருமானத்தில் இரண்டு ஏக்கர் விவசாய நிலம் வாங்கி அதில் இப்போது விவசாயம் செய்துவருகிறார். கூடவே, 19 நாட்டு ரக மாடுகளையும் வளர்க்கும் இவர், தனது நிலத்துக்கு நடுவில் சின்னதாய் ஒரு மண் வீடு கட்டி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தகவல் சுவாரஸ்யமாக இருந்ததால் ஓம் பிரகாஷைத் தொடர்பு கொண்டு பேசினோம். “எனக்கு வல்லநாடு பக்கத்தில் இருக்கும் நாணல்காடுதான் பூர்விகம். தாத்தா நயினார் விவசாயி. அப்பா சேதுராமலிங்கம் கோர்ட்டில் வேலைசெய்தார். பொறியியல் படித்து முடித்ததும் நானும் இன்றைய இளைஞர்களைப் போலவே வெளிநாட்டு வேலை மோகத்தில்தான் இருந்தேன்.

படிக்கும் காலத்திலேயே எனக்கு விவசாயத்தின் மீது சின்னதாக ஒரு ஈர்ப்பு இருந்தது. வீட்டில் மாடித்தோட்டமெல்லாம் போட்டதுண்டு. ஆனாலும், அவசரமாய் பொருளீட்டும் ஆர்வத்தில் 2012-ல் வெளிநாட்டு வேலைக்குப் போனேன். 2017 வரை அங்கு தான் வேலை செய்தேன். கடைசியாக, ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். இப்போது அங்கு இருந்திருந்தால் இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் வந்திருக்கும். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

எனக்கு என் தாத்தாவை ரொம்பப் பிடிக்கும். வெளிநாட்டில் இருக்கும் போதே தாத்தா இறந்துவிட்டார். ஆனால், விசா பிரச்சினையால் நேரில் வந்து கடைசியாக ஒருமுறை தாத்தாவின் முகத்தைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. என்னதான் கைநிறையச் சம்பாதித்தாலும் சொந்த ஊரில் இருந்து சம்பாதிக்கும் நிம்மதி வெளிநாட்டுச் சம்பளத்தில் இல்லை என்பதை நான் உணர்ந்த நேரம் அது.

2012-லேயே வெளிநாட்டு வேலைக்கு வந்துவிட்டதால் லேப்டாப், ஏசி கார் என சொகுசு வாழ்க்கையின் அத்தனை அடையாளங் களும் மிகச் சிறியவயதிலேயே எனக்குக் கிடைத்துவிட்டது. ஆனாலும் அதிலெல்லாம் திருப்திடையாத நான் அதைத் தாண்டியும் சிறப்பான ஒன்றைத் தேடினேன். எனது அந்தத் தேடலுக்கான விடைதான் இப்போது நான் வாழும் வாழ்க்கை” என்று நேர்த்தியாகப் பேசுகிறார் ஓம் பிரகாஷ்.

தான் வளர்க்கும் நாட்டு மாடுகளுடன் ஓம் பிரகாஷ்...
தான் வளர்க்கும் நாட்டு மாடுகளுடன் ஓம் பிரகாஷ்...

வெளிநாட்டு வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் உண்டு. பிழைக்க வந்தவர்களை அங்கே இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தியதை அனுபவபூர்வமாக உணர்ந்தார் ஓம் பிரகாஷ். அத்துடன், அங்குள்ள உணவுக் கலாச்சாரமும், நுகர்வுக் கலாச்சாரமும் இது நாம் வாழ்வதற்கான தளம் அல்ல என்னும் எண்ணத்தை இவருக்குள் இன்னும் அதிகமாக ஊட்டியது.

அதையும் நம்மிடம் பேசிய ஓம் பிரகாஷ், “வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு வந்ததும், மண்பாண்டப் பொருள்களை வாங்கி விற்றேன். ஆனால், இடைத்தரகர் வேலை போலவே இருந்ததால் அதையும் விட்டுவிட்டேன். அப்புறமாகத்தான் இந்த விவசாய நிலத்தை வாங்கி காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் என சாகுபடி செய்ய ஆரம்பித்தேன். வெளிநாட்டு வேலை அளவுக்கு வருமானம் இல்லாமல் போனாலும் இதில் கிடைத்த வருமானம் எனக்கு ஆத்ம திருப்தியைத் தந்தது.

மழைக் காலத்தில் தினமும் நிலத்துக்கு வரவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அப்படி இல்லாமல் தினமும் நிலத்தை வந்து பார்க்கும் வகையில் என்னை நானே மாற்றிக் கொள்ள நினைத்தேன். அதற்காகவே நாட்டு மாடுகளை வாங்கிவிட்டேன். இன்றைய தேதியில் என்னிடம் திருநெல்வேலி தென்பாண்டி ரக நாட்டு மாடுகள் 19 உள்ளன. இந்த மாடுகளின் சாணத்தின் ஒரு பகுதியை இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்துகிறோம். இன்னொரு பகுதியை ஊதுபத்தி, திருநீறு போன்ற மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி விற்க பயன்படுத்துகிறோம்” என்று வியப்பூட்டினார்

தோட்டத்து வீட்டில் மனைவி, மகனுடன்...
தோட்டத்து வீட்டில் மனைவி, மகனுடன்...

ஓம் பிரகாஷின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தானும் தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி பிரியங்கா. கணவரின் இயற்கை விவசாயப் பணிகளில் அவரும் கைகொடுக்கிறார்.

நாட்டு மாட்டுச் சாணத்தில் இருந்து மதிப்புகூட்டிய பொருட்களை தயாரிப்பது குறித்து பேசிய ஓம் பிரகாஷ். “சாணத்தில் இருந்து திருநீறு, சோப்பு, பல்பொடி, அகல் விளக்கு, கிருமி நாசினி உள்ளிட்ட பல பொருட்களை நாங்களே தயாரிக்கிறோம். இதற்கும் நல்ல சந்தை வாய்ப்பும் உள்ளது.

நிலத்தின் நடுவே மண் வீடு...
நிலத்தின் நடுவே மண் வீடு...

இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்பதற்காக எங்கள் நிலத்திலேயே சிமென்ட் பயன்படுத்தாமல் கல், மண்ணைக் கொண்டே மண் வீட்டைக் கட்டினோம். எங்கள் தேவைக்கான காய்கறி, பழங்கள் எங்கள் நிலத்தில் இருந்தே கிடைத்துவிடும். நாட்டு மாடுகளை சாணத்திற்குத்தான் வளர்க்கிறோம். கன்றுக் குட்டிகளும் இருப்பதால் பால் விற்பனை நோக்கத்தில் கறப்பதில்லை. எங்கள் வீட்டுத் தேவைக்கான பாலை மட்டும் கறந்து எடுத்துக்கொள்வோம். ஆக, எங்களுக்கான செலவுகள் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. கையில் மிஞ்சிய காசை வைத்து சிவசைலம் என்னும் ஊரில் இன்னும் கொஞ்சம் விவசாய நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து அங்கு தானியங்கள் பயிர்செய்து வருகிறேன். அதில் கிடைக்கும் தானியங்களும் வீட்டுத் தேவைக்கு எடுத்துக்கொள்வேன்.

வீட்டில் சோலார் மின்சாரத்தைத் தான் பயன்படுத்துகிறோம். விவசாயத் தேவைக்கான தண்ணீர் மோட்டாருக்கும் சோலார் பவர் தான். இதனால் மின்சாரச் செலவும் எங்களுக்கு இல்லை. வீட்டில் சமையலுக்கு சாண எரிவாயு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். அதனால் கியாஸ் சிலிண்டர் செலவும் இல்லை. நாட்டுக் கோழிகள் வளர்ப்பதால் அதில் இருந்து கிடைக்கும் முட்டையும் கறியும் எங்களுக்கான அசைவ உணவுத் தேவையை பூர்த்தி செய்துவிடும். இப்படி அனைத்துக்கும் நாங்கள் இயற்கை வழியைப் பின்பற்றுவதால் கூடுதல் செலவுகளுக்காக மாதம் இவ்வளவு ரூபாய் கையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை. அதனால் பசித்துச் சாப்பிடுகிறேன். களைத்துத் தூங்குகிறேன்” என்றார்.

இயற்கை எரிவாயு கலன்
இயற்கை எரிவாயு கலன்

400 சதுர அடியில் சின்னதாய் இரண்டு அறைகள், ஒரு சமையல்கூடத்துடன் இருக்கிறது ஓம் பிரகாஷின் தோட்டத்து மண் வீடு. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையையே லட்சியமாகக் கொண்டுவிட்ட இந்த இளைஞர், தொடு சிகிச்சை, மருந்தில்லா மருத்துவம் ஆகியவற்றையும் படித்திருக்கிறார்.

“ஆடம்பர வாழ்க்கையில் அத்தனை நிறைவு இல்லை. ஆனால், இயற்கையோடு இணைந்து வாழும் இந்தப் பயணம் என் மனதுக்கு மிகுந்த நிறைவைத் தருகிறது” - இது விடைபெறும் தருணத்தில் ஓம் பிரகாஷ் நம்மிடம் சொன்னது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in